பொலிஸ் மீது பாய்ந்த மைத்திரி



நீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று நண்பகல் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் சிறிலங்கா பொலிசார் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இதுபோன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறிலங்கா ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு இராணுவ அதிகாரிக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், அவரை கைது செய்து நீண்டகாலம் தடுத்து வைப்பதற்குப் பதிலாக, சட்ட நடவடிக்கையை காவல்துறையினர் துரிதப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா ஜனாதிபதி கூறியுள்ளார்.

இராணுவத்தினரை கைது செய்த பின்னர் விசாரணைக்கு நீண்டகாலம் இழுத்தடிப்பது, அரசியல் விவகாரமாக மாறும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

குறைந்தபட்ச விளக்கமறியல் காலத்தை சிறிலங்கா பொலிஸ் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா இராணுவத் தளபதி தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் செய்த விமர்சனங்கள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments