புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள்


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன்,  ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில் வைத்திருக்கலாம் என்பதை வலியுறுத்தும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா  அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நீதிபதி தனது உத்தரவை வழங்கி இரண்டு வாரங்களின் பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைப்பதற்கான கால எல்லையை நீட்டிப்பதற்கான கோரிக்கையை நிராகரிப்பது தொடர்பில், நீதிபதி தன்னிச்சையான தீர்மானத்தை எடுக்கமுடியும் என்றும், அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, குறித்த காலப்பகுதிக்குள் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதவிடத்து சந்தேகநபர்கள் பிணையில் செல்வதற்கான அனுமதியும் புதிய சட்டவரைவில் வழங்கப்பட்டுள்ளது.

‘நீதிபதி சந்தேகநபர்களை தனிப்பட்ட ரீதியாகச் சந்திக்கவும்,   அவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் நல்வாழ்வு மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் சந்தேகநபர்களின் கருத்துக்களை பதிவுசெய்வதற்குமான அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக’ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில்  விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு முன்கூட்டிய அறிவித்தல்கள் எதையும் விடுக்காது நீதிபதி செல்ல முடியும் எனவும், அவ்விடங்கள், பதிவேடுகள் மற்றும் தடுப்புக் கட்டளைகள், ஏனைய பதிவேடுகள், ஆவணங்களைப் பார்வையிடவும் அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டமூலம் அமுலுக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் 72 மணித்தியாலங்கள் வரை நீதிபதியின் முன் நிறுத்தப்படாது தடுத்து வைத்திருப்பதற்கு காவற்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும்.

No comments