போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மைத்திரி - சர்வதேசத்திடம் முறையீடு

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடத்தப்படும் நீதித்துறை விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் தலையீடு செய்வதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2008ஆம் அண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த விசாரணைகளில்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலையிடுவதாக, குற்றம்சாட்டி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தூதரகங்களில் முறையீடு செய்தனர்.

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்ய முயன்ற போது, அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரை சிறிலங்கா அதிபர் பாதுகாக்க முற்படுகிறார் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த நீதித்துறை விசாரணைகளில் அவர் தலையீடு செய்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் தலைவர் பிரிட்டோ பெர்னான்டோ குற்றம்சாட்டினார்.

No comments