மட்டக்களப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் கூட்டமைப்பினர் சந்திப்பு

கிழக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து (Taranjit Singh Sandu)  நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் இந்திய உதவியுடனான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்த இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து (Taranjit Singh Sandu)  பாசிக்குடாவிலுள்ள உல்லாச விடுதியில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளை கூட்டாக சந்தித்து உரையாடினார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாழேந்திரன், எஸ்.கோடீஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கோ.கருணாகரம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிய அரசியலமைப்பானது விரைவில் அமைக்கப்பட வேண்டும். பல்லினங்கள் வாழும் நாட்டிற்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி முறையே எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நிலைப்பாடுகள் தொடர்பிலும், மாகாண ஆட்சி முறைமையில் குறிப்பாக வடக்கு கிழக்கு என்பன இணைக்கப்பட்ட வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பும் முகமாக தொழிற்பேட்டைகள் அமைத்தல், குடிநீர் பிரச்சினைகள், கழிப்பறை வசதியற்ற குடும்பங்களுக்கான கழிவறை வசதிகள் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இந்தியாவுடனான எமது மக்களின் நெருக்கம் அதிகரித்துள்ளமையால் மட்டக்களப்பில் உயர்ஸ்தானிகர் அலுவலக கிளையொன்றினை அமைத்தல் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நீர்ப்பாசன செயன்முறைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#High Commissioner of India #TNA #Batticalo







No comments