தன்னையும் தொங்கவிடக்கோருகின்றார் ரெஜினோல்ட் கூரே?


வடமாகாணத்திலுள்ள அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிலும் தனது உருவப்படத்தை தொங்கவிட வடக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.இதுவரை ஜனாதிபதி,முதலமைச்சர் படங்களை தொங்கவிட்ட அதிகாரிகள் தற்போது ஆளுநரையும் தொங்கவிட தயாராகிவருகின்றனர்.

இதனிடையே இலங்கையின் எந்தவொரு மாகாணத்திலும் ஆளுநரது படம் தொங்கவிடப்படாத நிலையில் தற்போது அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற சில எடுபிடிகளே படத்தை தொங்கவிடும் ஆலோசனை தெரிவித்திருந்ததாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநர் தனது புகைப்படத்தை தொங்கவிட எந்த அருகதை உள்ளவரென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றுள்ளதாம்.
யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைப்பாறிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், மதுவரித்திணைக்கள அதிகாரிகள் சர்வமதத் தலைவர்கள் புத்திஜீவிகள் உள்ளிட்டோரை சந்தித்து குடாநாட்டின் வன்முறைகள் மற்றும் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் விரிவாக ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர்; யாழ் குடாநாட்டில் பாடசாலை முதல்வர்கள் கல்வித் திணைக்கள பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய ஆளுநர் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டிய வளிமுறைகள் தொடர்பிலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான காரணங்கள் அதனை இல்லாமல் செய்வதற்கு வேண்டிய நடவடிக்கை தொடர்பாக வினா எழுப்பினார்.

ஆளுநர் செயலகத்தில் நாளையதினம் பாதுகாப்பு தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் தகவலை பெற்றுக்கொள்ளும் கூட்டமாக இது அமைந்ததாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. 

No comments