காணாமல் போனோருக்கு தீர்வு கேட்கிறார் பங்காளி டக்ளஸ்?


காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற விசாரணைப் பொறிமுறை ஒன்று தேவை. அதன் ஊடாக விசாரிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென காணாமல் போதல்களின் முக்கிய பங்காளியான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளகாணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாகவே தமிழ் மக்கள் இருக்கின்றனர். எனவே அமைக்கப்பட்டுள்ளகாணாமல் போனோர் அலுவலகத்தினரின் செயற்பாடுகள் உறவுகளைத் தொலைத்து நீதிகேட்டுப் போராடிவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வலுவாகமுன்னெடுக்கப்பட வேண்டும்.

காணாமல் போனோர் தொடர்பானவிசாரணைகள் 1983ஆம் ஆண்டுகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். யுத்தகாலத்திலும், சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டகாலப் பகுதியிலும் பலர் காணாமல் போயுள்ளார்கள் அவர்கள் பற்றியமுழுமையான விசாரணைகளும் அவசியமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியபரிகாரங்கள் காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி பல வருடங்களாக வீதிகளில் தங்கியிருந்து போராடிவருகின்றார்கள். யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டுப் போராடும் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருவோம் என்றும், சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மீட்டுத் தருவோம் என்றும், படையினர் வசமுள்ளமக்களுக்குச் சொந்தமானகாணி, நிலங்களை முற்று முழுதாகமீட்டுத் தருவோம் என்றும், வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுவோம் என்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்றும் வாக்குறுதி வழங்கிய கூட்டமைப்பினர் இப்போது வாக்களித்த தமிழ் மக்களை மறந்தவர்களாக அரசின் ஆசியுடன் எதிர்க்கட்சியாக இணக்க அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

மக்கள் நடத்தும் தன்னெழுச்சியான போராட்டங்களில் வலிந்துகலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேடைகளில் அரசாங்கத்தை எதிர்ப்பது போலவும், அரசுக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதுபோலவும் உரையாற்றுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது.


தெற்கில் அரசின் ஆசிபெற்ற எதிர்க்கட்சியாக இணக்கஅரசியல் உறவு கொண்டாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கில் அரசைஎதிர்ப்பது போல் நாடகமாடி தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் உரிமைப் போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதை மக்கள் கண்டிக்க வேண்டும்.

இன்றைய அரசியல் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களின் பாதுகாப்புக் கவசமாகவே செயற்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கூட்டமைப்பு உளப்பூர்வமாக முயற்சி செய்தால் அதை நிறைவேற்றும் கட்டாயத்தில் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். அதைச் செய்து எமது மக்கள் எதிர் கொண்டுள்ள பிரதான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் தாமும் மக்களுடன் சேர்ந்து போராடுவதாக நாடாகமாடுவதை ஆட்சியாளர்கள் அலட்டிக்கொள்ளப்போவதில்லையென டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட பரணகம விசாரணைக்குழு முன்பதாக வாக்குமூலமளித்த பலரும் டக்ளஸ் தலைமையில் ஈபிடிபியால் அரங்கேற்றப்பட்ட கடத்தல்கள் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments