எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுவேன் நண்பர்களிடமிருந்து என்னை காப்பீராக பனங்காட்டான்

சிங்கள பொளத்த ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு ஒருபுறம், தலைமைப் பீடத்திலுள்ள சிங்கள ஆளுனரின் வெறுப்பு மறுபுறம், ஒன்றாகக் கூடிவந்தவர்களின் கழுத்தறுப்பு இன்னொருபுறம்,
கூட்டிவந்தவர்களின் கால்தட்டு உட்புறம் என அனைத்தையும் துணிச்சலுடன் சந்தித்து யதார்த்த அரசியலை நேர்த்தியாக எடுத்துச்செல்வது என்பது பெரும் சவால்.


ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் இன்று அதிகம் பேசப்படுபவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் எதிரிகளின் கல்லெறியிலும் பார்க்க, தமதின அரசியல் சகோதரர்களால் தாக்கப்படுவது இப்போது அதிகரித்து வருகிறது.

அறிக்கைகள், உரைகள், கண்டனங்கள் என்று பலவகையான சவால்களை முதலமைச்சர் இப்போது சந்தித்து வருகிறார். இதற்கான அடிப்படைக்காரணம், அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைக்கான அடுத்த தேர்தல்.

வடமாகாண சபையின் ஆயுட்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ளது. 2004ம் ஆண்டு நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகள் பெற்று முதலமைச்சரானார். இப்போது 79 வயதாகும் ஆன்மிகவாதியான இந்த தாடிக்கார முதியவர், அரசியலுக்கு வந்தபோது பலரது புருவங்களும் உயர்ந்தன.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசு ஆகிய நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாகச் சென்று விடுத்த அழைப்பை ஏற்று, இந்த நான்கு அணிகளும் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்குமென்ற நம்பிக்கையுடன் இவர் அரசியலில் கால்பதித்தார் என்பது இரகசியமன்று.
மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பி.பி.சி. ஆங்கில சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில், “நாங்கள் (தமிழர்) எவரையும் வெறுக்கவில்லை, எங்களுக்கு எவருடனும் பிரச்சனை இல்லை, எங்கள் சொந்த அடையாளத்துடன் நாம் தமிழராக வாழ எங்கள் உரிமையைக் கேட்கிறோம்” என்று இவர் தெரிவித்த கருத்து அவ்வேளை பலராலும் நியாயமாகப் பார்க்கப்பட்டது.

அதேசமயம், வல்வெட்டித்துறையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் இவர் உரையாற்றுகையில், “பிரபாகரன் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய பெருந்தலைவர்” என்று தெரிவித்த துணிச்சலான கருத்து, ஒருபுறத்தே வரவேற்பையும் வேறு சில மட்டங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தமிழரசுக் கட்சியின் சில முக்கிய புள்ளிகள் கூட பிரபாகரனை அவர் புகழ்ந்தது பற்றி விசனமடைந்தனர்.

“சிங்களவர் தங்களின் யுத்தகாலத் தலைவர்களை நாயகர்களாகப் பார்ப்பதுபோல, தமிழர்களும் தங்கள் தலைவரை  அவ்வாறு பார்க்கின்றனர்” என்று இவர் பி.பிசிக்கு அளித்த விளக்கம், சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் அப்போதே விக்னேஸ்வரன் மீது இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பின்னணியில் முதலமைச்சரின் அண்மைக்கால மற்றும் சமகால உரைகளையும் அறிக்கைகளையும் பார்க்கையில், மற்றைய அரசியல்வாதிகளைப்போல காலத்திற்கேற்றவாறு அவர் தமது நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பது புலனாகும்.

இதற்கான சில புள்ளிகளை இங்கு குறிப்பிடலாம்:


  • யுத்தம் முடிந்து ஆண்டுகள் ஒன்பதைக் கடந்த பின்னரும் இராணுவம் தமிழர் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கிறது. தமிழ் மக்களின் பொருளாதார வளங்களைக் கையகப்படுத்தியிருக்கும் சிங்களப்படை, அவர்களது சொந்த மண்ணில் விவசாயம் செய்து அவர்களுக்கே விற்று வியாபாரம் செய்கிறது.   • தமிழ் இளைஞரிடையே போதைவஸ்து, மதுபானப் பாவனை, வன்செயல்கள் ஆகியவற்றை ஊக்கப்படுத்தி அதன் பின்னணியில் படைத்தரப்பே இயங்குகிறது.  • சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு தமிழ் மண்ணில் நடத்துவதன் மூலம், தமிழ் மக்களை அவர்களின் சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக்க முயற்சிப்பது.

இவற்றின் தொடராக முதலமைச்சர் கடந்த இரண்டு வாரங்களில் சுட்டிக்காட்டிய இரு விடயங்கள் மிக முக்கியமானவை.

  • தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களத்தின் வெற்றிச் சின்னங்கள் இருக்கக்கூடாது என்பது ஒன்று.

  • வடக்கில் பாரிய பௌத்த விகாரைகளை அமைக்க ஆளுனர் றெஜினோல்ட் குரே உத்தேசித்துள்ளார் என்பது இரண்டாவது. 

மயிலிட்டியில் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை ஆகஸ்ட் 21ம் திகதி ஜனாதிபதி சிறிசேன நாட்டினார். இங்கு உரையாற்றிய அவர், மயிலிட்டி மகாவித்தியாலயம் இரண்டு வாரத்தில் மக்களிடம் மீளளிக்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவித்தல் வந்த மறுநாளே அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

மின்னாமல் முழங்காமல் மழை பொழிந்தது என்று சொல்வது போன்றது இது.
காங்கேசன்துறையில் உள்ள தையிட்டி என்ற இடத்தில் விகாரையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் ஆகஸ்ட் 22ம் திகதி நடைபெற்றது. இந்த அடிக்கல்லை நாட்டி வைத்தவர் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே.

“தமிழர்கள் உடலில் தனித்தமிழ் இரத்தம் இப்போது இல்லை. இங்குள்ள மருத்துவ மனைகளுக்கு சிங்கள இராணுவமே இரத்தம் வழங்குவதால் தமிழரின் இரத்தத்தில் சிங்கள இரத்தம் கலந்துள்ளது” என்று அடிக்கடி பகிரங்கமாகக் கூறுவதில் ஆனந்தமடையும் குரே, இப்போது விகாரைகள் அமைப்பதில் தன் கவனத்தைச் செலுத்துகிறார்.

வடமாகாண சபையின் ஆயுட்காலம் முடிந்த பின்னர் வரப்போகும் தேர்தலுக்கு முன்னரான இடைக்காலத்தில, விகாரைகளை அமைக்க ஆளுனர் குரே திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே கூறியிருந்தார்.

உடனடியாக இதனை மறுதலித்த ஆளுனர், எங்கெங்கே விகாரைகள் அமைக்கப்படவுள்ளது என்பதை முதலமைச்சர் பகிரங்கப்படுத்துவாரா எனச் சவால் விட்டிருந்தார். இதற்கு முதலமைச்சரிடமிருந்து பதில் வருவதற்கு முன்னரே, முதலாவது விகாரைக்கு அடிக்கல் நாட்டிவிட்டார் ஆளுனர் குரே. இந்த விகாரை நிர்மாணம் தொடர்பாக ஆளுனர் தெரிவித்துள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரனானவை.

தையிட்டியில் இந்த விகாரை பலநூற்றாண்டுகளாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஆளுனர், 1946ம் ஆண்டில் இதற்கான உறுதி எழுதப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

1946 என்பது 72 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அப்படியானால் பலநூற்றாண்டுகளாக இந்த விகாரை இங்கிருந்தது என்று எவ்வாறு கூறமுடியும்?

1954ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இறுதியாக இந்த விகாரையில் வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும், உள்நாட்டு யுத்தத்தினால் இங்கிருந்த விகாரை முற்றாக அழிவடைந்ததாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் என்று ஆளுனர் குரே கூறும் தமிழருக்கு எதிரான இனவழிப்பு, அவர்களின் தாயக மண்ணில் 1980க்குப் பின்னரே ஆரம்பமானது.

இதனடிப்படையில் பார்க்கின், 1954க்கும் 1983க்கும் இடைப்பட்ட 30 ஆண்டு காலத்தில் இங்கு வெசாக்பண்டிகை கொண்டாடப்படாத காரணம் என்ன?

பலாலியில் இராணுவமுகாம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், அதன் ஆரம்பகாலப் பணிகள் எவ்வாறானவை என்பதையும் தெரிந்துகொண்டால், தையிட்டி திஸ்ஸ விகாரையின் உண்மையான வரலாற்றை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

இரண்டாம் மகாயுத்தம் முடிந்த ஒரு தசாப்தத்தின் பின்னர் பலாலியில் முதலாவது படைமுகாம் அமைக்கப்பட்டது. இதன் பெயர்ப் பலகையில்  TAFII Head Quarters  என்று எழுதப்பட்டிருந்தது.

Task Antiforce of Illicit Immigration (சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் செயலணி) என்பது இந்த முகாமின் பெயர். அக்காலத்தில் வடபகுதிக் கடல் வழியாக சட்டவிரோத குடியேற்றமும். பொருட்கள் கடத்தலும் இடம்பெறுவதாகக் கூறி அதனைத் தடுக்கும் கண்காணிப்புக்கு என இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்படாதவகையில் இந்தப் படைமுகாமின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

பின்னர் 1980களின் ஆரம்பத்திலிருந்து படிப்படியாக பலாலியை தலைமையாகக்கொண்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன.

இந்த விபரங்களுடன் பார்க்கையில், பௌத்த விகாரையொன்று தையிட்டியில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. இங்கு பொளத்தர்கள் வெசாக் பண்டிகை கொண்டாடியதற்கான தரவுகளும் கிடையாது.

கோட்டை முனியப்பரைக் கண்டவரைக் கண்டே பலகாலமாகி விட்டது. என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடிய வரிகளே, தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் பொருந்தும்.
வடமாகாண சபையின் முதலாவது ஆளுனராகவிருந்த சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக பணியாற்றியவர்.

இப்போதிருக்கும் ஆளுனர் குரே தென்னிலங்கையில் சிங்களத்தைக் காவல்புரியும் ஓர் அரசியல்வாதியாக இருந்தவர். இவர்கள் இருவரது கனவும் நினைவும் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்குவதே.

தமிழ் மக்களால் தங்கள் பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றம் அனுப்பப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவுமின்றி (கடுமையான எதிர்ப்புடன்) முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

சில சந்தர்ப்பங்களில் ஆளுனர் குரேக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் சிலர் சேர்ந்து இயங்குவதையும் காணமுடிகிறது.

முதலமைச்சர் தமது அரசியல் பயணத்தை அடுத்த மாகாண சபையிலும் தொடர வேண்டுமென பெருமளவான பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ் அரசியல் அமைப்புகளும் இதனை விரும்புகின்றன.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் பிரமுவர்கள்கூட இதனையே விரும்புகின்றனர்.
முதலமைச்சர் தமது அரசியல் பயணத்தைத் தொடரவேண்டுமானால், 2013ல் ஏறிவந்த படகைவிட்டு இறங்கி புதிய படகில் ஏறவேண்டிய சூழ்நிலை உருவாகிவருவது தெரிகிறது.

இலங்கைத் தமிழரின் அரசியல் பாதை எப்போதும் சூறாவளியில் சுழலும் படகுப் பயணம் போன்றது. இதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டும் எவ்வாறு வதிவிலக்காக முடியும்?

No comments