தண்ணீர் விநியோகம் இடைநிறுத்தம்! தவிக்கும் மக்கள்!

வரலாற்று சிறப்பு மிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் பெருந்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீர் விநியோகத்தை போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசசபை நேற்று(வியாக்கிழமை) திடீரென இடைநிறுத்தியுள்ளது.

பிரதேசசபையின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் ஆலயத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர். மண்டூர் முருகன் ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த 06ம் திகதி ஆரம்பித்தது. வரும் 26ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

மண்டூர் ஆலய நிர்வாகம் 2016ஆம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்தின் மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. கொடியேற்றம் உள்ளிட்ட ஆலயத்தின் சகல நடவடிக்கைளையும் பிரதேச செயலகத்தின் ஊடாகவே நீதிமன்றம் ஒழுங்கமைத்துள்ளது.

இம்முறை ஆலய திருவிழாவிற்கு முன்னரான ஒழுங்கமைப்பு கூட்டத்தில், ஆலயத்தில் நீர் விநியோகத்தை பிரதேசசபை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்திற்கு நாட்டின பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் யாத்திரை சென்று தங்கியிருப்பது வழக்கம். இது தவிர, பல ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

நீர்விநியோகத்தை பொறுப்பேற்ற பிரதேசசபை அதை சீராக மேற்கொள்ளவில்லை. இதனால் பக்கதர்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்தன. இதையடுத்து கடந்த சில தினங்களின் முன்னர், இராணுவத்தின் தண்ணீர் பவுசரை பெற்று பிரதேசசெயலகமும் நீர் வழங்கியிருந்தது.

நீர் வழங்கலை தாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இராணுவத்தின் பவுசர் ஊடாக பிரதேசசெயலகமும் நீர் வழங்கியதால் பிரதேசசபை கோபமடைந்துள்ளது. உடனடியாக, இன்றிலிருந்து நீர் வழங்கலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஆலயச்சூழலிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் அந்தரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதேசசபையின் ஒழுங்கீனத்தால்தான், இராணுவ பவுசர் மூலமாக மேலதிக ஏற்பட்டை செய்ய வேண்டியதானது என ஆலய தர்மகர்த்தா சபை விளக்கமளித்த போதும், பிரதேசசபை அதை ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments