எதிர்காலத் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க கூடுகிறது தமிழ் மக்கள் பேரவை!

தமிழ் மக்களுக்கான எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பாக காத்திரமான முடிவொன்றை எடுப்பது குறித்து - ஆராய எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது. முக்கியஸ்தர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் அரசியல் நெருக்கடியானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் உடனடியாக இதற்கு மாற்றுத் தீர்வொன்று எட்டப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.

எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும் அந்தத் தலைமைத்துவம் ஒட்டுமொத்த தமிழினத்துக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துத் தமிழினத்தையும் ஒன்றுபடுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு பாரிய முயற்சியெனவும் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments