முதலமைச்சர் புறக்கணிப்பு: கதிரை பிடிக்க முண்டியடிக்கும் கூட்டமைப்பு!


வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இலங்கை ஜனாதிபதி செயலணியினை வடக்கு முதலமைச்சர் முற்றாக நிராகரித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முண்டியடித்து உள்ளே நுழைகின்றனர்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கான குழுவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்காதபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைவாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், கடந்த மாதம் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்திருந்ததுடன், இதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டது. 48 பேர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த ஜூலை 30ஆம் திகதி செயலணியின் முதலாவது கூட்டம் நடைபெற்றிருந்தது. கூட்டத்திற்கு தமக்கு அழைப்புவிடுக்காமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை காவடியெடுத்திருந்தனர்.

இதனையடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி பி.ப. 3 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் செயலணியின் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்புக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

முதலில் அரசியல் தீர்வை முன்வைக்க வலியுறுத்தி வடக்கு முதலமைச்சர் குறித்த கூட்டத்தை புறக்கணித்திருந்த நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கப்போகும் நகர்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

No comments