கணேஸ் வேலாயுதத்திற்கு கொலை மிரட்டல்?

டெலோ கட்சியிலிருந்து விலகியுள்ள அதன் முன்னாள் பிரச்சார பொறுப்பாளர் கணேஸ் வேலாயுதத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்த மர்ம நபர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.இன்று காலை அங்கு வந்திருந்த இரு மர்ம நபர்கள் கணேஸ் வேலாயுதம் தொடர்பாக விசாரித்தறிந்துள்ளதுடன் அவர் இல்லாத நிலையினில் அவரது சாரதியை தாக்க முற்பட்டுள்ளதுடன் மிரட்டியும் சென்றுள்ளனர்.

டெலோ கட்சியில் வருமானம் பார்ப்பதை மட்டும் தொழிலாக கொண்டவர்கள் நிரம்பியிருக்கின்றனர்.மக்களிற்கு இயன்றதையேனும் செய்ய தயாராக இல்லாத நிலையில் அக்கட்சியில் இருப்பதை விடுத்து வெளியே வருவதே பொருத்தமானதென தெரிவித்து கணேஸ் வேலாயுதம் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்த மர்ம நபர்கள் சாரதியை தாக்க முற்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

சம்பவவேளை கணேஸ் வேலாயுதம் தனது வீட்டிலிருந்ததாக தெரியவருகின்றது.சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அவர் அலுவலகத்திற்கு வந்திருந்ததுடன் நெல்லியடி காவல்துறையில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே குறித்த சந்தேக நபர்கள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.குறிப்பாக கட்சி தலைவர் சிறீகாந்தாவின் பின்னணியில் குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி இணைந்து செயற்படுவதில் விருப்பங்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் அது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments