ஜனாதிபதி செயலணிக்கு போவோம்:கூட்டமைப்பு விடாப்பிடி!

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதால் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலணியில் குறைகள் காணப்படுவதாக கூறுவதால், அச்செயலணியில் நேரடியாக பங்கேற்று குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.
அத்துடன் இச்செயலணியில் பங்கேற்பதையும் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில் சாதகமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்போம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தார்.
எனினும் குறித்த செயலணியில் கலந்துகொள்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு ஏகமனதாக தீர்மானித்திருந்தது.
இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments