டாண் பணியாளர் வழக்கை சிஐடிக்கு மாற்றுமா நீதிமன்று?

வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, யாழ்ப்பாண இளையோரிடம் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடிகளின் முக்கிய சூத்திரதாரி கொழும்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் என அறிய முடிகிறது.

அந்தப் பெண் உத்தியோகத்தரின் பின்புலத்திலேயே யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரும செயற்பட்டுள்ளனர். வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வரும் சான்றாவணப்படுத்தல் விவரங்களை மோசடியாகத் திருடி, அவற்றை வைத்து யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அந்தப் பெண் உத்தியோகத்தர் செயற்பட்டுள்ளார்.
தனது இந்த மோசடிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரையும் அந்தப் பெண் உத்தியோகத்தர் பயன்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு – தொழில் உடன்படிக்கைக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்கள், அந்த அந்த நாட்டுத் தூதரங்கள் ஊடாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு சான்றாவணப்படுத்த அனுப்பி வைக்கப்படும்.

அவற்றை இந்த பெண் உத்தியோகத்தர் மோசடியாக அகற்றிவிட்டு, அந்த ஆவணங்களின் விண்ணப்பதாரிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி, மீண்டும் ஆவணங்களைப் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். அத்துடன், அவற்றுக்கு பல இலட்சம் ரூபா பணத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பெற்றுள்ளார்.

ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு டாண் குகனையும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிருபாகரனையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
அவரால் முன்னெடுக்கப்பட்டஇந்த மோசடி நடவடிக்கையில், உரிய வகையில் சான்றாவணப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் சிலர் வெளிநாட்டு வேலைவாய்பைப் பெற்றுச் சென்றுள்ளனர். அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது முகவர்கள் இருவருக்கும் அது நம்பிக்கையளித்துள்ளது.
எனினும் பலரது ஆவணங்கள் மோசடி செய்யப்பட்டவையாக காணப்பட்டதால், அவை வெளிநாட்டுத் தூதரங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த ஆவணங்களுக்குரியவர்களின் தொழில் உடன்படிக்கை – வேலைவாய்ப்பு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் உத்தியோகத்தரின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த பெப்ரெவரி மாதம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் அந்த முறைபாடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் துணையுடன் அது நீதிமன்றுக்கு செல்லாது இணக்கத்துக்கு கொண்டுவரப்பட்டதாக முடிக்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்டவரின் பணமும் திருப்பிச் செலுத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பெண் உத்தியோகத்தர் போலி, செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். எனினும் அந்தச் செய்தி இணையத்தளங்களில் மட்டுமே வெளியாகியிருந்தது.

தற்போது, சுவிஸ் நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 7 இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், ஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி சேவை நிறுவன அலுவலகத்தில் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த இளைஞனின் விண்ணப்பத்துக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பணம் மற்றும் ஆவணங்கள் பெற்றவர்களையும் அந்த இளைஞனால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கினார். முறைப்பாட்டில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம், அந்த இளைஞனால் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட ஊடகவியலாளருடையது என பொலிஸார் கண்டறிந்தனர். அதனால் ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்யதனர்.

அத்துடன், வங்கிக் கணக்கிலக்கத்தின் அடிப்படையில் அரசியல்வாதி கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இளைஞன் வைப்புச் செய்த வங்கிக் கிளையின் அமைவிடத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

முறைப்பாட்டாளர் சார்பிலும் சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாக சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அவற்றை ஆராய்ந்த நீதிமன்று, இந்த மோசடிகளின் முக்கிய சூத்திரதாரியான பெண்ணை அடையாளம் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பியது. எனினும் சந்தேகநபர்கள்தமக்கு அவரை முகநூலின் ஊடாகவே தெரியும் விவரங்கள் எவையும் இல்லை என்றனர்.

அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியல் வைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார்.


இலங்கை அரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வரும் ஆவணங்களை மோசடி செய்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மட்டுமே சட்ட நடவடிக்கைக்குச் சென்றுள்ளனர்.இன்னும் பலர் நீதியைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பர். எதிர்காலத்திலும் இந்த மோசடிகள் தொடராமல் இருக்கவேண்டுமாயின், மோசடியில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட நபருக்கும் பணத்தை செலுத்தினால், வழக்கை முடிவுறுத்தலாம் என்று சந்தேகநபர்கள் இருவருகும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றும் போதுதான், முக்கிய சூத்திரதாரியை நீதிமன்றின் முன் கொண்டுவர முடியும்.

பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் இருவருடனும் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அவரால் நம்பிக்கைக்கு உரியவர்களாக காணப்பிக்கப்பட்ட இருவருமே தற்போது விளக்கமறியலில் உள்ளவர்கள்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை வைத்தே அந்த பெண் உத்தியோகத்தர் இந்த மோசடிகளைச் செய்துள்ளார். எனவே முக்கிய சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமாகின்றது.


  


No comments