நல்லூரைக் கண்காணிக்க 30 கமரா 600 பொலிஸ் !


நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களின் நன்மை கருதி முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமராக்கள் ஆலயச் சூழலிலுள்ள பல்வேறிடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றினை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் பணி யாழ்.மாநகர சபையால் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர சபையின் பிரதி ஆணையாளர் அ. சீராளன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனை முன்னிட்டு இவ்வருடப் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலப் பகுதியில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வருடம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனை முற்று முழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றுப் பொருட்கள் பல்வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே, பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து அதற்கு மாற்றீடான பொருட்களை ஆலயச் சூழலிலுள்ள தற்காலிக விற்பனை நிலையங்களில் பெற்றுப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த நடைமுறையை மீறுபவர்கள் மீது யாழ்.மாநகரசபையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வழமை போன்று ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளுக்கும் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித்தடைகளில் யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - என்றார்.

No comments