ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த?


2019 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 125 ஆவது பிரிவின் கீழ், மாவட்ட நீதிமன்றம் ஒரு தீர்ப்பு பற்றிய விவகாரத்தை உச்சநீதிமன்றத்திடம் பாரப்படுத்த முடியும்.

அந்த விடயம் தொடர்பான தமது முடிவை, உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள், மாவட்ட நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புக் குறித்து உச்சநீதிமன்றம் மாத்திரமே விளக்கமளிக்க முடியும்.

தேவைப்பட்டால், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் என்ற வகையில், மாவட்ட நீதிமன்றத்தை நாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

சிறிலங்கா ஜனாதிபதி மாத்திரமே, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோர முடியும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியிருந்தார்.

ஆனால்,  கூட்டு எதிரணி வேறுபட்ட அணுகுமுறையைக் கையாளவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், இரண்டு தடவைகள் சிறிலங்கா ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்டவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்துள்ளது,

எனினும், இந்த அரசியலமைப்புத் திருத்தம், மகிந்த ராஜபக்சவுக்கும், சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பொருந்தாது என்று சில சட்ட நிபுணர்கள் வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments