டெலோவிலிருந்து வெளியேறினார் கணேஸ்!


டெலோ கட்சியிலிருந்து அக்கட்சியின் ஊடகபிரச்சாரங்களிற்கு பொறுப்பாக இருந்த கணேஸ் வேலாயுதம் விலகியுள்ளார்.அங்கு வருமானம் பார்ப்பதை மட்டும் தொழிலாக கொண்டவர்கள் நிரம்பியிருக்கின்றனர்.மக்களிற்கு இயன்றதையேனும் செய்ய தயாராக இல்லாத நிலையில் அக்கட்சியில் இருப்பதை விடுத்து வெளியே வருவதே பொருத்தமானதென கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை தான் டெலோ கட்சியிலிருந்து வெளியேறுவதை கணேஸ் வேலாயுதம் யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனிடையே தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி இணைந்து செயற்படுவதில் விருப்பங்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் அது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
டெலோ தலைவர் சிறீகாந்தாவிற்கு தனது விலகல் தொடர்பில் அனுப்பிய கடிதத்தை ஊடகங்கள் முன்னர் சமர்ப்பித்த கணேஸ் வேலாயுதம் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் இறுதிகிரியைக்கு பணம் செலவளித்தமை தனது தனிப்பட்ட விருப்ப அடிப்படையில் நடைபெற்றதெனவும் எவரும் கோரி நடைபெற்றிருக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

மக்களிற்கு இயன்றதை செய்யவேண்டுமென்ற தனது சிந்தனை உள்ளவர்களை இணைத்து அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவித்த அவர் தனது 16 வயதிலேயே டெலோ அமைப்பில் இணைந்து விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

அரசியல் எனது நோக்கமல்ல.ஆனால் மக்களிற்கு சேவையாற்ற அரசியல் தேவையாகவுள்ளது.இதனாலேயே அது பற்றி பேசவேண்டியிருக்கின்றது.மக்களிற்கு சேவையாற்ற வந்தவர்களிற்கு சொகுசு கார் பெமிட் தேவையில்லை.அதனால் வரும் வருவாயை மக்களிற்கே செலவு செய்யவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே தனது விலகல் கடிதம் தொடர்பில் கட்சி தலைமை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லையென மேலும் தெரிவித்தார்.

No comments