கூட்டமைப்பு ஒரு கூழ்முட்டை :அடைகாப்பது முட்டாள்தனமானது


யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்றே தமிழ்மக்கள் நம்பியிருந்தார்கள். இதனாலேயே பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெற வைத்தார்கள் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதன் பேரில் மத்தியில் மைத்திரி அரசையும் வெல்லவைத்தார்கள். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடைபெற்றது தமிழினப் படுகொலையல்ல என்று சொல்லும் அளவுக்கு அரசாங்கத்தின் குரலாகவே பேசத்தொடங்கிவிட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்று கூட்டமைப்பு ஒரு கூழ்முட்டை. அதனைத் தொடர்ந்தும் அடைகாப்பது முட்டாள்த்தனமானது என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கும் சனசமூக நிலையங்களுக்கும் உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (22-08-2018) கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல்வாதியாக வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே உள்ளார். வடக்கின் அடுத்த முதல்வராக விக்னேஸ்வரன் அவர்கள் தனிக்கட்சி அமைத்துப்போட்டியிடுவாரா அல்லது புதிய கூட்டணி அமைத்துப்போட்டியிடுவாரா அல்லது கூட்டமைப்பிலேயே தொடர்ந்தும் நீடிப்பாரா என்ற வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்றுவருகின்றன. இதன் பிரதிபலிப்பாகவே முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் ‘தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதாக நினைத்து தமிழினத்தை அழிக்கவேண்டாம்;’ என்று முதலமைச்சர் அவர்களுக்குப் பகிரங்க அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியதில் விடுதலைப்புலிகளின் பங்கிருந்தது. கூட்டமைப்பின் மூக்கணாங்கயிறு விடுதலைப்புலிகளிடமேயே இருந்தது. ஆனால், இன்று அந்தக்கயிறு இல்லை. இதனால், கூட்டமைப்பின் பிரதான கட்சி, பங்காளிக்கட்சிகளையெல்லாம் புறந்தள்ளித் தன்னை முன்னிறுத்தித் தான் எடுக்கும் எதேச்சாதிகாரமான முடிவுகளையே கூட்டமைப்பின் பெயரால் முன்னெடுக்கின்றது. இதுவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலவீனத்துக்குப் பிரதான காரணம்.

பொருட்கள் காலாவதியாகுவதைப் போல சில அரசியல் கட்சிகளும் கால கதியில் காலாவதியாகின்றன. தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் வீரியமாக முன்னெடுக்கத் தவறுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்று காலாவதியாகும் நிலையில்தான் உள்ளது. எனவே கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் அவசியம் முதலமைச்சர் அவர்களுக்கு இல்லை.

கட்சிகளின் இருப்பைக் காலமும், காலத்துக்கான அவற்றின் பணிகளும்தான் தீர்மானிக்கின்றன. தமிழர்விடுதலைக்கூட்டணியில் மாற்றங்கள் இடம்பெற்றதால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவானது. இதனை அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணியைப் பலவீனப்படுத்துவதாக யாரும் ஆட்சேபிக்கவில்லை. காலத்தின் தேவை என்றே வரவேற்றார்கள். அதேபோன்றுதான் போருக்குப் பின்னர் தங்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு புதிய அரசியல் தலைமைத்துவம் ஒன்றின் தேவையையும் புதிய அரசியல் அணி ஒன்றின் தேவையையும் தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளார்கள். அதற்கு நடந்து முடிந்த உள்;ராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.

No comments