வடக்கு கல்வியில் முன்னேறுகின்றது?

வட மாகாணம் கல்வியில் பின்னிலை அடைவதாகக் கூறினாலும் உண்மையில் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் கடந்தாண்டு க.பொ.த சாதாரண தரத்தில் 6 சதவீத வளர்ச்சியை காட்டியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற "அங்கர் திறமை கொண்ட மாணவர்கள்" போட்டி  தொடர்பான ஊடக சந்திப்பிலேயே  மேற்படி கருத்தை அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"மாணவர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் குறைவாக உள்ளது. பாடசாலை மட்டப் போட்டிகள் கல்வித் திணைக்கள சுற்றுநிரூபத்துக்கு அமைய மூடிய அறைகளில் தான் நடைபெறுகிறது. இதனால் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. ஆனால் இப்போது ஒழுங்கமைப்பட்டுள்ள இப்போட்டிகளினூடாக அத்திறமைகள் வெளிக்கொண்டுவரப்படும். ஆனால் இப்போட்டிகள் மக்களின் கலாசாரங்களை பாதிக்காத வகையில் நடைபெற வேண்டும். 

எமது மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளன. வட மாகாண மாணவர்களே தொடர்சியாக முன்னணியில் உள்ளார்கள். ஆனாலும் புதிய கண்டுபிடிப்புக்களை செய்யும் மாணவர்கள் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். 

நாம் திறமைகளை பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் தான் அறிந்து கொண்டு இருக்கிறோம். அதேநேரம் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும். அத்துடன் திறமைகள் மூலம் வருமானம் ஏற்படுத்தக்கூடிய வழி அமைத்துக்கொடுக்க வேண்டும்.

மேலும் வட மாகாணம் அனைத்திலும் பின்னிலைக்கு செல்வதாகக் கூறப்பட்டாலும் கல்வியில் வளர்ச்சியடைந்தே செல்கின்றது. 30 ஆண்டு யுத்தத்துக்குப் பின்னர் நாம் கல்வியில் வளர்ச்சியடைந்து கொண்டு தான் உள்ளோம்.

அந்தவகையில், கடந்தாண்டு க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு சதவீத வளர்ச்சியை வட மாகாணம் காண்பித்துள்ளது. இணைப்பாட விதான போட்டிகளில் 26 பதக்கங்களை பெற்றுள்ளது. இவை தவிர  சர்வதேச போட்டிகளிலும் எமது மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தேசிய அணியிலும் வடக்கு மாகண  பாடசாலை மாணவர்கள் இடம்பிடித்துள்ளார்கள்" என்றார்.

No comments