ஆணைக்குழுவிற்கு குடைச்சல்: தொடர்ந்து சிக்கலில் அனந்தி!

புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து பெற அச்சுறுத்தலென கடிதம் வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்தியதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சில் கைத்துப்பாக்கியை திருட்டு தனமாக பெறமுற்பட்ட விவகாரம் ஓயுமுன்னர் தற்போது இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.

புலம்பெயர் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள மகனிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்  உள்ளதாகவும் தம்மை இனந்தெரியாதோர் அச்சுறுத்துவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் போலியாக முறையிட குடும்பஸ்தர் ஒருவர் முற்பட்டுள்ளார். எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளமறுத்துள்ளனர். முறையிட சென்றவரின் முறைப்பாட்டை ஏற்குமாறு வடக்கு மாகாண சபை அமைச்சரான அனந்தி சசிதரன் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தம்மை இனம் தெரியாத சிலர் அச்சுறுத்துவதாக முறைப்பாடு செய்ய முற்பட்டவர் மீதான ஆரம்ப கட்ட விசாரணையினில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை  வழங்கியுள்ளார்.

இவ்வாறு முரண்பாடான தகவல்களையடுத்து ஆணைக்குழுவினால் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதே அவரது மகன் ஐரோப்பியநாடு ஒன்றில் தற்போது வதிவிட அனுமதி இன்றி தற்காலிகமாக வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நிரந்தர வதிவிட அனுமதியை பெறும் நோக்கில் போலியான முறைப்பாட்டை பதிவு செய்ய முயன்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறித்த முறைப்பாட்டினை ஏற்க மனித உரிமை ஆணைக்குழு மறுத்து விட்டது.

இந்நிலையில் குறித்த விடயத்தினை முறைப்பாடாக ஏற்று பதிவு செய்யுமாறு வடமாகாண அமைச்சர் அனந்தி யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அதகாரிகளிற்கு அழுத்தங்கொடுத்துள்ளமையே தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து அவரது அழுத்தங்கள் தொடர்பில் கொழும்பு தலைமையகத்திற்கு முறையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments