தீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா?
தீருவில் பொதுப் பூங்காவில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் நினைவுத் தூபி மட்டுமே அமைக்கப்படக்கூடாது மாற்று இயக்கங்களுக்கும் அதே இடத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை நிராகரித்து அனைவருக்கும் நினைவுத் தூபி அமைக்கும் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி.யின் இரண்டு உறுப்பினர்களும் இணைந்து நிறைவேற்றினர்.

.
வல்வெட்டித்துறை நகர சபையின் அமர்வு நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் தீர்மானத்தை முன்வைத்தார்.
‘விடுதலைக்காகப் போராடிய அனைத்து இயக்கங்களின் போராளிகள், படையினராலும் இனவெறியாளர்களாலும் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நினைவாகவும் ஓர் நினைவுத் தூபி அமைக்கவேண்டும். குமரப்பா புலேந்திரன் உள்பட 12 மாவீர்கள் நினைவுத் தூபியை முதலில் கட்டி முடிக்கவேண்டும். அதன் பின்னர் மற்றைய நினைவுத் தூபியைக் கட்டவேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
குறிப்பாக ஈபிடிபி, புளொட் போன்ற சிறீலங்கா படைகளின் ஒட்டுக்குழுக்களுளோடு இணைந்து தமிழ் மக்களைக் கொன்ற குவித்த துரோகக் குழுக்களுக்கும் இங்கே நினைவுத் தூபி அமைப்பதற்கு தீர்மானம் எடுத்திருப்பது வருத்தத்துக்குரியதே.
சபையின் கடந்த அமர்விலும் இதே தீர்மானம் முன்மொழியப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால், குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளுக்கு மாத்திரம் நினைவுத் தூபி அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
கடந்த அமர்வில் தோற்கடிக்கப்பட்ட தீர்மானம் மீளவும் சபைக்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தோற்கடிக்கப்பட்ட தீர்மானத்தில், திருத்தங்கள் மேற்கொண்டு நான்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் அந்தத் தீர்மானத்தை மீளவும் சபைக்கு கொண்டு வரமுடியும் என்று தவிசாளர் தெரிவித்தார். தீர்மானம் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.
இயக்கம் இருந்தால் இவ்வாறு ஒரு தீர்மானம் கொண்டு வருவீர்களா? அது இயக்கத்துக்குரிய புனிதமான இடம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கந்தசாமி சதீஸ் தெரிவித்தார். சுயேச்சைக் குழு உறுப்பினர் கணேசமூர்த்தி கஜன், இலங்கை – இந்திய கூட்டுச் சதியால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரர்களுக்கு மாத்திரமே அங்கு தூபிஅமைக்கப்பட வேண்டும். அங்கு மாற்றுக் கட்சிகள், இயக்கங்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஏனையோருக்கு தூபி அமைக்கப்படுவதன் ஊடாக, குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் தூபியை – வரலாற்றுச் சின்னத்தை அழிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
சபையில் குழப்பநிலமை தோன்றியது. தவிசாளர் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தினார். தீர்மானத்துக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 6பேரும், ஈ.பி.டி.பியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்தனர். (கடந்த அமர்வில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.)
சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் 4பேர், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.சதீஸ் ஆகியோர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் தீர்மானம் விவாதிக்கும் போது சபையில் இருந்து அதனை எதிர்த்திருந்தார். அலைபேசி அழைப்பு வந்ததும், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினார்.
கூட்டமைப்பின் தீர்மானம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேறியது. இதனையடுத்து வாக்களிப்பை எதிர்த்த 7 உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். அடுத்த அமர்வை நடத்த விடமாட்டோம். சபையை முடக்குவோம். மக்களை அணிதிரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
Post a Comment