அரசியலமைப்பை சாத்தியப்படுத்தவே முயற்சி:மனோ கணேசன்!

உண்மையில் புதிய அரசமைப்பை சாத்தியப்படுத்தவே நான் என் கருத்துகளை கூறுகிறேன் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.அதிலும் தமிழை விட சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் இதை கூறி “பொறுப்பில்” உள்ளவர்களை வெட்கப்பட வைக்கவே இதை நான் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொழி என்பது என் பொறுப்பில் உள்ள விடயம். மேலும் அது தொடர்பில் நாட்டில் இன்று ஓரளவு கருத்தொருமைப்பாடு இருக்கிறது. மேலும் அது இன்றைய அரசியலமைப்பிலேயே இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த புதிய அரசியலமைப்பு என்பது அனைவரும் சேர்ந்து கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தி செய்ய வேண்டிய பாரிய பணி என்பதும், அதன் அடிப்படை வேறு, இதன் அடிப்படை வேறு.
அரசியலமைப்பு பற்றிய எனது கருத்துகள் இன்று நாட்டில், குறிப்பாக தமிழ் பேசும் மக்களை மத்தியில், தாம் "ஏமாற்றப்படுகிறோமோ" என்ற சந்தேகத்தையும், சிங்கள மக்கள் மத்தியில், தமிழருக்கு உரிய நியாயத்தை வழங்க தாம் "தவறுகிறோமோ" என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன.
நேற்று (26) நள்ளிரவு வரை, முழு இலங்கையும் தூங்கும் போது, ஹிரு டிவி, “பலய” அரசியல் விவாத நிகழ்வில், பொது எதிரணி எம்பிக்கள் இருவருடன் நான் மிக கடுமையாக சிங்கள மொழியில் அரசியலமைப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது நிகழ்ச்சியுடன் தொலைபேசியில் திருகோணமலை பதவியபுரவில் இருந்து தொடர்பு கொண்ட, அனில்குமார என்ற ஒரு சிங்களவர், “ஏன் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து, இனப்பிரச்சினையை தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளை எதிர்க்கிறீர்க்கள்” என, பொது எதிரணி எம்பி திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்பினார். “புலிகளை அழித்து, கிழக்கு மாகாண திருகோணமலையில் வாழும் சிங்களவர்களை காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவை மறந்து பேசுகிறீர்கள்” என , திசாநாயக்க எம்பி, கேள்வி எழுப்பிய அணில்குமாரவை திட்டி பேசி, விஷயத்தை இனவாதத்தை நோக்கி திசை திருப்பினார்.
நான் என் பேச்சில், அணில்குமாரவுக்கு பாராட்டு தெரிவித்தேன். அணில்குமார, “திருகோணமலையில் வாழ்வதால்தான், போரின் கொடுமை அவருக்கு தெரிகிறது. ஆகவே போர் நின்றால் போதாது. போருக்கான மூல காரணங்கள் ஒழிய வேண்டும். ஆகவேதான் அவர் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்கிறார்”, என்று கூறி, “அந்த சாதாரண மனிதருக்கு இருக்கும் “தலை” (ஒலுவ) அதாவது மூளை உங்களுக்கு இல்லை” என, பொது எதிரணி எம்பீக்கள் இருவரையும் நான் கடுமையாக சாடினேன். முகத்தில் ஈயாடாமல் என்னை பாத்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருந்தார்கள்.
எனது அமைச்சுக்கான நிதியை பெறுவதில் நான் எப்படி வெற்றி பெற்றேன் .உண்மையில் இதுபோல் “நான் ஏமாற்றப்படுகிறேன்; எனக்கு நிதி வேண்டும்” என உரக்க சத்தமிட்டுத்தான், அதை நான் இன்று சாத்தியமாக்கியுள்ளேன்.
எனது கருத்துகள் பற்றி இன்னமும் பல தேசிய நாளேடுகள், பல தலையங்கங்கள் அவ்வப்போது எழுதியுள்ளன. அந்த தேசிய ஊடகங்களின் கருத்துகளையும் கவனித்து வாசித்து அறிய வேண்டும்.
ஏனெனில் நாட்டில் புதிய பார்வையின் மூலம் புதுசிந்தனைகளை ஏற்படுத்தும் நாடு தழுவிய தேசிய கருத்தோட்ட கலந்துரையாடல்களை என்னால் இயன்ற அளவில், ஏற்படுத்தவே நான் எப்போதும் விளைகிறேன்.
சும்மா, “அடுத்த வருடம், தமிழீழத்தில்” என்று பண்டிகை வாழ்த்து செய்திகளை அனுப்பி, ஊடக பக்கங்களை நிரப்ப நான் விளைவதில்லை.
மாறாக, எல்லோரும் சொல்கிறார்கள் என்று, நானும் அதையே சொல்லி, செம்மறியாட்டு அரசியலை செய்து, நல்லூர் ஆலய திருவிழாவில், சங்கிலி அறுத்துக்கொண்டு, கோவிந்தா கோசம் போட்டு ஓடும் திருடனுடன் சேர்ந்து, நானும் “கோவிந்தா, கோவிந்தா” கோசம் எழுப்ப முடியாதெனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“நாளை புது அரசியலமைப்பு வரவேண்டும்; தேசிய இனப்பிரச்சினை தீர வேண்டும்” என நான் எவரையும் விட மனதார விரும்புகிறேன். நான் இன்று சொல்லும் ஆரூடம் பிழைக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.

இதை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சி உங்களுக்கும், தமிழ் மிரருக்கும் இருக்க வேண்டும். நாளை, நாங்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பு எப்படியோ வருமானால், “ஆஹா மனோ கணேசன் சொன்னது பிழைத்து விட்டது” என்று கூற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்காதீர்கள். “மனோ கணேசனின் கருத்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்து, இந்த புது அரசிலமைப்பின் வரவை சாத்தியமாக்கியுள்ளது” என சொல்ல தயாராகுங்கள்.

ஏனெனில் நான் சொல்வது மறைசிந்தனை அல்ல, அது “மறைநிந்தனை” என்பதை அறிகவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments