அமைச்சுக் கதிரையொன்றைக் குறிவைத்து முதலமைச்சரைக் கவிழ்க்கும் இலக்கு - பனங்காட்டான்

2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்க முயற்சித்து தோல்வி கண்ட சுமந்திரன் அன்ட் கம்பனியினர், வடமாகாண சபை ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர் அவரைப் பதவியிலிருந்து வீழ்த்த எடுக்கும் நடவடிக்கைகளை இப்போது தீவிரமாக செயற்படுத்தி வருகின்றனர். 

இலங்கை அரசியலில் நிகழ்காலம் என்பது பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற அல்லது பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் எப்போதும் அரசாங்கத்தின் சுவீகாரப் பிள்ளைகளாகவிருந்து தம்மைப் பாதுகாத்து வந்ததைப் பார்த்திருக்கிறோம்.

இதனால் அவர்கள் கொலை, கொள்ளை, கையூட்டல் என்று எதனைச் செய்தாலும் சட்டத்தின் பாதுகாப்புடன் எஜமான வாழ்க்கை வாழ்பவர்களாகவே இருந்துள்ளனர்.

ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறி வருகிறது. தெற்கில் மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் காலத்தில் சீனா வழங்கிய நிதி உதவி, விஜயகலா மகேஸ்வரன் கூறிய புலிகள் மீண்டும் வரவேண்டுமென்ற கருத்து என்பவை பலவேறு விசாரணைகளைச் சந்தித்து வருகின்றன.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் வடக்கு மாகாணசபையே இன்றைய பேசுபொருள்.

இச்சபையின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கமும், ரவிகரனும் அரசாங்க அதிகாரிகளை கடமை செய்யவிடாது தடுத்த குற்றத்துக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

வன்னியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்யச் சென்றவர்களை தடுத்ததுதான் இவர்கள் மீதான குற்றம். அரசாங்கம் மீது பொதுமக்கள் தாக்கல் செய்ய வேண்டிய வழக்கு இங்கு சுழிமாறி நிற்கிறது.

அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்கியது தவறென டெனீஸ்வரன் என்ற மன்னார் பிரதேச மாகாணசபை உறுப்பினர் முதiமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தாக்குதல் செய்த வழக்கு, இப்போது வடமாகாணசபை கலைக்கப்படலாமென்று அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அச்சம் வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது.

நிகழ்காலமாகவுள்ள இந்த விவகாரம், இடைக்காலத் தீர்ப்புக்குள் தள்ளப்பட்டு, நிலைமாறு காலத்துள் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழரசுக் கட்சியின் பின்பலத்தில் அவசரப்பட்டு மேற்கொள்ளப்பட்டு தோல்வி கண்ட ஒரு நடவடிக்கையே, குரங்குவால்போல் நீண்டுவரும் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம்.

முக்கியமான விடயங்களை காலப்போக்கில் மறந்துவிடும் தமிழரின் (நல்ல) குணமே, இதனையும் பலரை மறக்கச் செய்திருக்கலாம்.

38 உறுப்பினர்களைக் கொண்ட வடமாகாணசபையில் 30 பேர் கூட்டமைப்பின் தமிழரசு, ரெலோ,  புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பங்காளர்கள்.

ஆனால், வடமாகாண சபை தமிழரசுக் கட்சியின் மற்றைய மூன்று கட்சிகளும் இணைந்து போகாது, தன்னிச்சையாக பல முடிவுகளை எடுப்பதால் பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

தமிழரசுக் கட்சி சாராத ஒரு அமைச்சரை பதவி நீக்கவென தமிழரசுக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை 2016 மார்ச் மாதம் கையளித்தனர்.

மூவர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இரண்டு அமைச்சர்கள் பதவி துறக்க நேர்ந்தது. இவர்களில் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழரசின் விசுவாசியான குருகுலராஜா.

மற்றைய இரு அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனீஸ்வரன் மீதான விசாரணை தொடரவிருப்பதால், அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு முதலமைச்சர் பணித்தார்.

இதனை அவர்கள் ஏற்கவில்லையாயினும் அவர்கள் பதவி நீங்க நேர்ந்தது.

இங்குதான் பிரச்சனையே ஆரம்பமானது.

இதன் எதிரொலியாக முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று ஆளுனர் றெஜினோல்ட் கூரேயிடம் இரவோடிரவாகக் கையளிக்கப்பட்டது.

21 உறுப்பினர்களின் ஒப்பந்தத்துடனான இந்தப் பிரேரணை 2017 ஜுன் 15ம் திகதி அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஆளுனர் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டு நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

மறுநாள் திரு. சிவஞானம் முகம்மலரச் சிரித்தவாறு ஆளுனரிடம் பிரேரணையைக் கையளிக்கும் படம் ஊடகங்களில் வெளியானது.

அவைத்தலைவர் என்பவர் சபாநாயகர் ஆவார். இப்பதவிக்குத் தெரிவான பின்னர் அவர் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டுமென்பது நியதி.

ஆனால், இவ்விடயத்தில் சிவஞானம் தமிழரசுக் கட்சிக்காரராக பகிரங்கமாகச் செயற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளுனர் இல்லத்தில் வைத்து தமிழரசு உறுப்பினர் ஒருவர் பிரேரணையை திடீரென தம்மிடம் கையளித்ததாகவும், அந்த உறுப்பினரைத் தமக்கு நினைவில்லையென்றும் மழுப்பலாக சிவஞானம் பதிலளித்தார்.

எந்த வகையிலும் இது நம்பக்கூடியதாக இல்லையென்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்தது.

அற்புதமான இந்தப் பிரேரணை நாடகத்தை ஆரம்பத்திலிருந்து மேடையேற்றிய நாள்வரை  நெறிப்படுத்தி வந்தவர் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன்.

இறுதியில், இரா.சம்பந்தன் தலையிட்டு பிரேரணை வாபஸ் பெறப்பட்டது.

இது நடைபெற்று சரியாக ஓராண்டுக்குப் பின்னர் முதலமைச்சரை சட்டத்துக்கு உட்படுத்தி வெளியேற்றும் முயற்சியாக அவர்மீது டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கின் இடைக்கால தீர்ப்பு வந்தது.

கடந்த மாதம் 26ம் திகதி மேல்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு, டெனீஸ்வரன் இப்போதும் அமைச்சராகவுள்ளதாகத் தெரிவித்தது.

அதன்படி, வடமாகாண சபை அமைச்சர்களின் எண்ணிக்கை ஆறாகியது. சட்டப்படி இதில் ஐவர் மட்டுமே இருக்க முடியும்.

இடைக்காலத் தீர்ப்பை முதலமைச்சர் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அத்தீர்ப்பை ஆளுனர் தம்மி~;டப்படி செயற்படுத்தவும் முடியாது.

இதற்கிடையில் இடைக்கால உத்தரவுக்கெதிராக மேல்நீதிமன்றில் முதலமைச்சர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாதென்பது சட்ட நிபுணர்களின் கருத்து.

இவ்விடயம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் 19 உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன்படி சிறப்புக் கூட்டமொன்றை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்த மாதம் 16ம் திகதி நடத்தினார்.

(முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுனரிடம் கையளித்ததற்கு நிகரான ஒரு செயற்பாடாக 16ம் திகதிய கூட்டத்தைப் பொதுமக்கள் பார்க்கின்றனர்.

முதலமைச்சரும் நான்கு அமைச்சர்களும் இதில் பங்கேற்கவில்லை. ரெலோ உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றி முதலமைச்சருக்கு ஆதரவாக அறிக்கையை வாசித்துவிட்டு வெளியேறி விட்டனர். புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் எவரும் சபையில் இருக்கவில்லை.

கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த 19 தமிழரசாருடன் கூட்டத்தை நடத்தி முடிக்கும் துர்ப்பாக்கிய நிலை அவைத்தலைவருக்கு ஏற்பட்டது,

2017ல் நம்பிக்கையில்லாப் பிரேரணை முயற்சி வெற்றியளிக்காத சுமந்திரன் அன்ட் கம்பனியினர், முன்னாள் ரெலோ உறுப்பினர் டெனீஸ்வரனை முன்னிறுத்தி முதலமைச்சரை சட்டத்தின் முன் அவமானப்படுத்தி கவிழ்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே இது என்பது பார்வையாளர்களாகிய தமிழ் மக்களின் கருத்து.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 23ம் திகதி தமது 79வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபை, அக்டோபர் 25ம் திகதி தனது ஐந்து வருட ஆட்சியைப் பூர்த்தி செய்கிறது. அன்றோடு மக்களால் தெரிவான 38 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

“வடமாகாண சபையும் அமைச்சர் குழாமும் அக்டோபர் 25 மட்டுமே செயற்பட முடியும். ஆனால், அதைத் தாண்டிய காலத்திலும், குறிப்பாக அடுத்த மாகாண சபைத் தேர்தல் வரையிலும் நானே அவைத்தலைவர்” என்று சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து இங்கு ஆழ்ந்த கவனத்துக்குரியது.

அடுத்த வடமாகாண சபைத் தேர்தலில் எந்த வகையிலாவது விக்னேஸ்வரனை போட்டியிடாது தடுக்க வேண்டும். அல்லது, போட்டியிட்டால் தோல்வியடையச் செய்ய வேண்டுமென்ற இலக்குடன் காய்கள் நகர்த்தப்படுவதை அவதானிக்கலாம்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக விக்னேஸ்வரன் இருக்க மாட்டாரென்பதை சுமந்திரன் பல தடவை கூறியுள்ளார்.

ஆனால், சம்பந்தன் அந்த நிலைப்பாட்டில் இல்லையென்பதை லண்டன் தமிழரசுக் கட்சி கிளைத்தலைவர் சட்டத்தரணி ஆர்.டி.இரத்தினசிங்கம் கொழும்பு வீரகேசரிப் பத்திரிகைக்கு அளித்த செய்தி சுட்டுகிறது.

இச்செவ்வியில் அவர் தெரிவித்த மூன்று விடயங்கள் காலத்தின் தேவை கருதி இங்கு மீள்பிரசுரம் செய்யப்பட வேண்டியவை.

1. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னமும் காலமுள்ளது என்று என்னிடம் குறிப்பிட்ட சம்பந்தன், விக்னேஸ்வரன் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகள் எதனையும் முன்வைக்கவில்லை.

2. ஒற்றுமையான கூட்டமைப்பினை தமிழர்களுக்குள் ஏற்படுத்தாது பெரும்பான்மையினரான சிங்களவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்குச் செல்வது அருகதையற்றது.

3. வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து அவருக்குச் சவால் விடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது உடன் நிறுத்தப்பட வேண்டும்.
(மேற்சொன்ன மூன்று கருத்துகளும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கே சமர்ப்பணம்)

யாழ்ப்பாணத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஷநீதியரசர் பேசுகிறார்| என்ற உரைத்தொகுப்பு நூலை லண்டன்வாழ் ஆர்.டி.இரத்தினசிங்கமே தொகுத்து வெளியிட்டிருந்தார்.

No comments