நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்

நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
அவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது, இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால், இவன் எங்கே…?
இவர்களுக்கே தெரியும், இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும் இன்று கந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய் தன துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு (மூத்த மகளின் மகனுக்கு) “கொலின்ஸ்” என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது.
அந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்….
இவன் தம்பி, வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படித்துக் கொண்டிருந்த வேளை எங்கள் ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைத்து கனபேரை பிடித்துக் கொண்டு போனாங்கள்.
அதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி, “ஆமியின்ர கையில பிடிபட்டு சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டு சாகலாம்” என்று சொல்லுவான்.
இவன் வெளிநாடு செல்ல விரும்ப இல்லை, சொன்னபடி இயக்கத்தில்தான் சேர்ந்தான். இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையாய் கூறத்தொடங்கினார்.
தம்பி இவன் விடுமுறை முடிந்து செல்வதற்கு முதல் நாள் தாயப் பார்த்து, அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை, இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது, அது நாட்டிற்கு மட்டும்தான். என்று சொன்னான். நாங்கள் அப்போது அதனை பெருதாக கருதவில்லை.
ஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது சாவு…. அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை, பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான்.
அவனோடு படித்த கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும்போது ….
அண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுதுபடுகிற நேரம் சந்தி மதவடியில் கதைத்துக் கொண்டு நன்றனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைத்துக் கொண்டிருந்தான். “நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது” என்ற கொலின்சின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது….. என்றான்.
இந்த 21 வயது இளைஞன் கரும்புலி கொலின்ஸ். தன் சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத் தானே தற்கொடையாக்கிய 10.07.1990க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அங்கு வடமராட்சியைச் சார்ந்த பகுதியில் தன்கூரிய பார்வையைச் செலுத்தியபடி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலைகொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும் தகவல் கொடுக்கும். எமது படகுகளை, படகோட்டிகளை, ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவிகள் செய்யும். இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம்.
அங்கு….
“பொடியல் கரும்புலியாகிக் கப்பலை அடிக்கப் போறாங்களாம்” என கதை பரவுகிறது.
கரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றது.
அக்கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடைபெறுவது தெரிகிறது.
படகு புறப்பட்டு……. பின் மறைகிறது.
கண்கள் கடலை ஊடுருவுகின்றன.
சிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு….
அதோடு வெடியோசை ….
அந்த உப்புக்காற்று அவர்களை அனைத்துக் கொண்டது.

No comments