ஆகஸ்ட் 10 வரை தமிழரசுக்கு ரெலோ காலக்கெடு


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும், ரெலோ, தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கிடையிலுமான உயர்மட்ட சந்திப்பொன்று நேற்று முன்தினம் திருகோணமலையில் நடைபெற்றது.

தேசியப்பட்டியல் நியமனம், வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி தலைவர்களை சந்திக்க ரெலோ அமைப்பு நேரம் கோரியிருந்த நிலையில், நேற்று இந்த சந்திப்பு நடந்தது. ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, நித்தியானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஏற்கனவே ரெலோவிற்குரிய தேசியப்பட்டியலை தமிழரசுக்கட்சி தன்னிடம் வைத்திருக்கிறது. இந்த அதிருப்தியை தெரிவித்த ரெலோ, ஓகஸ்ட் 10ம் திகதிக்குள் தமக்குரிய தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது. அது கிடைக்காத பட்சத்தில் ரெலோ வேறுவிதமான முடிவுகளை எடுக்குமென எச்சரித்துள்ளது.

வரும் 10ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டி, தேசியப்பட்டியல் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென ரெலோ அறிவித்துள்ளது.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் விடயமும் பேசப்பட்டது. விக்னேஸ்வரன் தொடர்பான தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழரசுக்கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? இந்த இரண்டு விடயங்களையும் 10ம் திகதிய ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தமிழரசுக்கட்சி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படியே இழுபறிப்பட்டுக் கொண்டிருக்க முடியாதென ரெலோ தெரிவித்தது.

இந்த சந்தர்ப்பத்தில்- விக்னேஸ்வரன் தொடர்பான ரெலோவின் நிலைப்பாடு என்னவென மாவை சேனாதிராசா இடைமறித்து கேட்டார். அதற்கு ரெலோ தரப்பு- “வழக்கமாக இப்படியான முக்கிய வேட்பாளர் தெரிவில் நீங்கள்தான் முடிவுகள் எடுப்பீர்கள். எங்களை கலந்துரையாடியதும் இல்லை. இம்முறை மட்டும் எமது அபிப்பிராயத்தை கேட்க வேண்டாம். உங்கள் நிலைப்பாட்டை 10ம் திகதி அறிவியுங்கள். அதன்பின்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்“ என ரெலோ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

10ம் திகதி முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதாக சம்மந்தன், மாவை சம்மதம் தெரிவித்தனர்.

கூட்டமைப்பை பதிவு செய்து, புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் ரெலோ வலியுறுத்தியது. ஏற்கனவே யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதை மாவை குறிப்பிட்டார். அது சகல கட்சிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்படவில்லை, நடைமுறையிலும் இல்லை. அதனால் புதிதாக உருவாக்க வேண்டுமென ரெலோ வலியுறுத்தியது.

கூட்டமைப்பில் புதிய கட்சிகளை உள்ளீர்ப்பது பற்றியும் ரெலோ பேசியது. ஈ.பி.ஆர்.எல்.எவ், வரதர் அணி எண்பவற்றை உள்ளீர்க்க வேண்டுமென பேசப்பட்டது. இது தவிர, வேறு விரும்பும் கட்சிகளையும் இணைத்து பலப்படுத்த வேண்டுமென்றார்கள். அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு காலம் தேவைப்பட்டாலும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை உடனடியாக மீளிணைக்க வேண்டுமென ரெலோ வலியுறுத்தியது.

இதற்கு பதிலளித்த சம்பந்தன்- “அவர்களை வெளியில் போகுமாறு நானோ, தமிழரசுக்கட்சியோ கூறவில்லை. அவர்களாகத்தான் போனார்கள். அவர்கள் மீள வருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை“ என குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களின் முன்னர் ரெலோ அனுட்டித்த வெலிக்கடை நினைவுநாள் நிகழ்வில் வரதராஜபெருமாளையும் பேச்சாளராக அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments