Header Shelvazug

http://shelvazug.com/

தவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ!


தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாகாணசபை உறுப்பினருமான என். விந்தன் கனகரட்ணம் இன்று வட மாகாணசபை அமைச்சரவை தொடர்பான விசேட அமர்வில் ஆற்றிய உரையினைத் தொடர்ந்து ரெலோவின் மாகாண அமைச்சர் ஞா. குணசீலன், சபா குகதாஸ், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் விந்தன் தலைமையில் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.இதேவேளை சிவாஜிலிங்கம் தனிப்பட்ட விடயமாக கொழும்பு சென்றுள்ளதாகவும் டெனீஸ்வரன் ரெலோவினால் மூன்று வருடங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விந்தன் தெரிவித்துள்ளார். 


விந்தன் கனகரத்தினத்தின் உரையில் இன்றைய தினம் இந்த மாண்புமிகு அவையிலே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயம் தொடர்பிலே இன்றைய நடவடிக்கைகளின் ஆரம்பித்திலேயே ஓர் விசேட அறிக்கையை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகி உறுப்பினர்களாக கடமையாற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்ந்த ஐந்து உறுப்பினர்கள் தரப்பில் விடுப்பதற்கு தங்கள் அனுமதியை நாடி நிற்கின்றேன்.

தங்கள் அனுமதியுடன் இந்த விசேட அறிக்கையை எமது ரெலோ இயக்கம் சார்ந்த உறுப்பினர்கள் சார்பில் சமர்ப்பிக்கின்றேன்.

இன்றைய விவாதத்தின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் கூட, அடிப்படையில் மாகாணசபைகளின் அதிகாரங்களும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர் சபையின் அதிகார வரையறைகளும், அதிகார உறவுகளும் அமைந்திருப்பை எவரும் மறுத்துரைக்க முடியாது.

இந்த விவாதத்திற்குக் காரணமான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் உயர் நீதிமன்றத்தினை நாடியுள்ளார். இந்த விடயம் வெறுமனே ஓர் அரசியல் விவகாரம் அல்ல! எமது விடுதலைப் போராட்டத்தின் நடுவில் இந்திய அரசின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினால் இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தம் இந்த விவாதப் பொருளுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது.
எம் இனத்தின் ஆயுதப்போராட்டம் சட்ட வடிவில் சாதிக்க முடிந்தது இந்த 13வது திருத்தம் மட்டுமே!

13வது திருத்தத்தை சகல சாத்தியமான வழிகளிலும் பலவீனப்படுத்தி அர்த்தமற்றதாக ஆக்குவதற்கு தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வந்திருக்கும் நடவடிக்கைகளை நாம் அனைவரும் நன்கறிவோம்.

இந்த திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் எமது வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநரும் இருந்துகொண்டிருப்பதை நாம் அறிவோம்.

மாகாணசபையின் அதிகார வரம்பிற்குள் ஆளுநர் அவ்வப்போது மேற்கொண்ட அத்துமீறல்களையும் ஊடுருவல்களையும் நாம் ஒருபோதும் மறுப்பதற்கில்லை.

எமது மாகாணசபை எதிர்நோக்கி நிற்கும் சட்டப்பிரச்சினைக்கான அமைச்சர்கள் நீக்கம் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் என்ற விடயத்தில் கௌரவ ஆளுநர் தனது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றவில்லை.

இவ்விடயத்தில் அவர் முற்றுமுழுதாக தவறியிருக்கின்றார். இது கவனயீனத்தால் ஏற்பட்டதா? ஆல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்று திட்டவட்டமாக சொல்ல முடியாவிட்டாலும், இன்றைய நெருக்கடி நிலைமைக்கான பெரும் பொறுப்பை ஆளுநரே ஏற்றாக வேண்டும்.

அதே நேரத்தில் கௌரவ முதலமைச்சர் அவர்களும் முறையாக செயற்படவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்தப் பின்னணியில் கௌரவ ஆளுநரும் கௌரவ முதலமைச்சரும் கலந்தாலோசித்து இந்த விவகாரத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

அதன்பின் வேண்டுமானால் கௌரவ முதலமைச்சர் அமைச்சர் சபையை மாற்றி அமைக்கலாம். எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் எப்போதும் உள்ளன.

இன்றைய சூழ்நிலையில் இந்த விவாதத்தினால் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படும் என்று நாம் கருதவில்லை.

ஆரம்பத்தில் இந்த விவாதத்தை கோரிய உறுப்பினர்களில் எமது கட்சி சார்ந்த ஒரு சிலர் இருந்தாலும் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக விவாதத்தின் நோக்கம் திசைதிருப்பப்படுவதற்கும் கருத்து மோதல்கள் இச்சபையில் மேலும் கூர்மை அடைவதற்கும் இந்த விவாதம் வழிவகுக்கும் என்றே நாம் இப்போது கருதுகின்றோம். இந்த விவாதத்தில் கருத்து மோதல்களால் எதையும் சாதிக்க முடியாது.

மாகாண சுயாட்சி என்ற சொற்பிரயோகத்தையே விரும்பாத இனவெறி சக்திகளின் கழுகுக் கண்கள் எமது வட மாகாணசபையை இப்போதும் உற்றுநோக்கி நிற்கின்றன.

இந்த நிலையில் எமது மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில் எவரும் செயற்படக்கூடாது. இந்த விவாதம் தவிர்க்கப்படுவதே உசிதமானது என்று கவனமான பரிசிலனையின் பின் நாம் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

இந்த அடிப்படையில் இந்த விவாதத்திலிருந்து ரெலோ கட்சியைச் சார்ந்த நாம் ஒதுங்கி நிற்கின்றோம் என்று தெரிவித்துக் கொள்கின்றேனென தெரிவித்ததையடுத்து விந்தன் தலைமையில் அனைவரும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

No comments