அரசியல் கைதிகளிற்கு மரணதண்டனை வழங்க நல்லாட்சி முற்படுகின்றது?

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது தொடர்ந்தும் தடுத்து வைப்பதன் ஊடாக அவர்களை மனநிலை பாதித்தவர்களாக முடக்கிவிடவோ அல்லது மரணதண்டனையினை பெற்றுக்கொடுக்கவோ இந்த அரசு முற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் கைதிகளது வழக்குகளை இழுத்தடிப்பதன் மூலம் அவர்களை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைப்பதில் இந்த அரசு மகிழ்ச்சியடைகின்றது.

ஒருபுறம் அரசியல் கைதிகள் என எவருமில்லையென கூறிக்கொண்டே மறுபுறம் அவர்களது விடுதலையை தடை செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது.

குறிப்பாக அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான சுலக்சன் போன்றோரது வழக்கினை மீண்டும் ஒக்டோபர் மாதத்திற்கு பிரதி சொலிட்டர் ஜெனரலிற்கு நேரமில்லையென கூறி ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர்களது வழக்குகளை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியது.அதற்கு எதிராக அவர்கள் தொடர் உண்ணாவிரதமிருந்து மீண்டும் வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றியது தெரிந்ததே.

அப்போது ஓகஸ்ட் முதலாம் திகதி விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசால் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு செய்யாது நேற்று அவசர அவசரமாக அரசியல் கைதிகளை வவுனியா நீதிமன்றிற்கு அழைத்து வந்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம் மீண்டும் பிரதி சொலிட்டர் ஜெனரலிற்கு நேரமில்லையென கூறி ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் குறித்த அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments