இளைஞர்களின் குறியீடாய் எங்கள் தலைமுறை தாண்டியும் அவன் இருப்பான்

ஏறத்தாழ நண்பகல் நேரம்.
உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான். இது பெருந் தீயை மூட்டப்போகும் ஒரு பொறி அல்லது காட்டிடை ஆங்கோர் பொந்திடை வைக்கப்பட்ட ஒரு அக்கினிச் குஞ்சு என்பதை அப்போது அவன் அறிந்திருப்பானா? அல்லது வேறு யாரேனும் எதிர்வு கூறியிருப்பார்களா? நான் அறியேன். ஆனால் அவனது நெஞ்சில் கனன்ற அந்த தீயை நான் அறிந்திருந்தேன்.
ஆம் 1974ம் ஆண்டு ஜுன் 5ம் நாள் திரவியம் என வீட்டாராலும் நெருக்கமானவர்களாலும் அழைக்கப்பட்ட சிவகுமாரன் ஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப்போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான். தன் சாவின் மூலம் அன்றைய இளந்தலைமுறையை, தமிழ் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கினான்.
1972ம் ஆண்டுக்கு முன்னரே சிவகுமாரனின் பெயர் எங்களைப் போன்றோருக்கு அறிமுகமாகி இருந்தது. பத்திரிகைச் செய்திகளிலும் அவனது பெயர் அடிபடத் தொடங்கி இருந்தது. யாழ்ப்பாண பிரதான வீதிக்கு அருகே அப்போதைய யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்கு குண்டு வைத்தது, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்து குண்டெறிந்தது என்பன போன்ற சம்பவங்களில் அவனது பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவற்றிற்காக அவன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தான்.
சிறைக்குள்ளும் அவன் கலகக்காரனாகவே இருந்ததனால் அவன் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தான். அவனது வழக்குகளுக்கான ஒவ்வொரு தவணையின் போதும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவான். அவனது வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் தவணைகளாக இழுத்தடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டான்.
அப்படியாக யாழ்ப்பாணச் சிறைக்கு கொண்டு வந்த ஓரு பொழுதினில்தான் நான் சிவகுமாரனை முதலில் சந்தித்தேன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படி 1972-05-22 அன்று இலங்கை, சிறிலங்கா என்ற புதிய பெயருடன் குடியரசாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்ற வகையில் கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலும் கைது செய்யப்பட்ட நாங்கள் எழுபது பேர் வரையிலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.
ஏற்கனவே 1971ம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபியினரும் அவர்களின் தலைவரான ரோஹண விஜயவீராவும் அங்கிருந்தார்கள். இந்தக் குடியரசு எதிர்ப்பு நடவடிக்கையில் முதலில் கைது செய்யப்பட மூன்று இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம் என்ற வகையில் மே 18ம் தேதியே நாங்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தோம். மறுநாள் சிறைக்கு அனுப்பப்பட்டபோது சிறைப் பணிமனைக்கு அருகிலேயே தீவிர கண்காணிப்புக்கும் பாதுகாப்பிற்குமாக வைக்கப்பட்டிருந்த ரோஹண விஜய வீராதான் முதலில் எங்களை வரவேற்றார்.
என்ன மூன்றுபேர்தானா என்று தனது மழலைத் தமிழில் இளக்காரத்துடன் அவர் கிண்டலடித்தார். எங்களுக்கு சற்று வெட்கமாயிருந்தது. ஆனாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் எங்களுக்கு பின்னால் இன்னும் ஆயிரம் பேர் வருவார்கள் என்று பெருமையடித்துக் கொண்டோம். ஆனால் மொத்தம் எழுபது பேர்தான் எதிர்ப்பு நடவடிகைக்காக கைதானார்கள் என்பது எங்களுக்கு சற்று ஏமாற்றம்தான். எங்கள் அனைவருக்கும் ஒரு மண்டபம் போன்ற கட்டிடத்தை ஒதுக்கியிருந்தார்கள்.
அந்த மே மாத இறுதி வாரத்தின் ஒருநாள், மாலைச் சாப்பாட்டிற்குப் பின்னால் எங்களைக் கணக்கெடுத்து மண்டபத்திற்குள் தள்ளி அடைத்துவிட்டார்கள். நாங்களெல்லோரும் கம்பிகளைப் பிடித்தபடி ஆவலுடன் வெளியை வெறித்தபடி இருந்தோம். ஏனெனில் அன்றிரவு சிவகுமாரன் கொண்டுவரப்படுகின்றான் என்ற தகவல் இரகசியமாக மதியமே எங்களுக்குக் கிடைத்திருந்தது.
எங்கள் கட்டிடத்திற்கு எதிரே செல் என்று சொல்லப்படும் தனி அறைகளில் ஏப்ரல் கிளர்ச்சிக்காரர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இரண்டு பகுதியையும் நடைவழி பிரித்திருந்தது ஏப்ரல் கிளர்ச்சியாளர்களுக்கு சிவகுமாரன் மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஏனெனில் அவர்கள் ஏப்பரல் கிளர்ச்சிக்குப் பயன்படுத்திய வெடிகுண்டு மற்றும் ஆயுத அறிவுகள் மிகப் பழசானவை.
ஆனால் சிவகுமாரன் புதிய பல தொழில் நுட்பங்களை அறிந்திருந்தான். சிறைக்குள் வருபவர்கள் முதலில் ரோஹண இருக்குமிடத்தை தாண்டி பின்னர் எங்கள் இடத்தையும் தாண்டித்தான் அந்த நடைவழியே மற்றப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இரவு ஒன்பது மணியளவில் சிறைக்காவலர்கள் புடைசூழ நடைவழியே வேட்டி அணிந்த அந்த நெடிய உருவம் நடந்து வந்தது. நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம்.
எங்கள் கட்டிடத்தின் முன்னால் வந்ததும் நாங்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினோம். முகமெல்லாம் மலர்ந்திருக்க கனிந்த குரலில் எல்லோருடனும் உரையாடத் தொடங்கிய சிவகுமாரன், தன்னை மறந்தவனாய் அங்கேயே தரித்து நின்றான். நான் என்னை மறந்தவனாக அவனையே வெறித்தபடி இருந்தேன். அவனுடைய காவிய வாழ்வில் நானும் பங்காளியானது ஆச்சரியம்தான். இன்றைக்கும் அந்தக் காட்சி என்னால் மறக்க முடியவில்லை. சிறைக்காவலர்கள் அவனை நகரும்படி வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.
இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இவர்களுடனேயே என்னையும் தங்க வையுங்கள் என்று உறுதியான குரலில் கூறத் தொடங்கினான் சிவகுமாரன். முகத்தின் மலர்வும் குரலின் கனிவும் அவனிடத்தே மறைந்துவிட்டது. காவலர்கள் மறுக்க சிவகுமாரன் அடம்பிடிக்க நிலமை கலகச் சூழலுக்கு மாறத் தொடங்கியது. சிவகுமாரன் அந்த நடைவழியிலேயே உட்கார்ந்து விட்டான். இறுதியில் எங்கள் கட்டிடத்திற்கு எதிரே செல்லில் அடைப்பதாக உடன்பாடு காணப்பட்டது.
இந்தத் தீவிரம், இந்தப் போர்க்குணம் அவனது இறுதிக்கணம் வரையில் அவன் கூடவே இருந்தது.
அவனது போர்க்குணத்திற்கும் தனித்த செயற்பாட்டிற்கும் உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம். 1973ம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள மொழிபேசும் பொலிசார் பெண்களுடன் அத்துமீறி நடக்க முற்பட்டனர். இதனைக் கண்ணுற்ற சிவகுமாரன் தன்னந்தனியனாகவே அவர்களை எதிர்த்தான். அவன் நல்லூர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டான். பொதுமக்கள் அவனுக்காக காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பொலிசார் அவனை விடுவிக்க வேண்டயதாயிற்று.
1960களின் பிற்கூறு இலங்கைத்தீவின் இன்றைய நிலைமைக்கான பல முகிழ்ப்புகளைக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிரான வெகுஐன இயக்கப் போராட்டங்கள், உலக அளவில் நிகழ்ந்த சீனக் கலாச்சாரப் புரட்சி, பிரான்சில் எழுந்து உலகெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சிகள், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட நவரெத்தினம் அமைத்த சுயாட்சிக் கழகத்தின் தோற்றம், இரசியாவில் லுமும்பா பல்கலைக் கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ரோகஹண விஐய வீரா இலங்கைக் கமயூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் தனியான கட்சியை அமைத்தும் இளம் கிளர்ச்சிக்காராக தோற்றம் பெற்றமை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை அந்தக் காலம் வெளிப்படுத்தியிருந்தது.
இவை யாழ் இந்துக் கல்லூரியில் படித்த சிவகுமாரனைப் பாதித்தது ஆச்சரியம்தான். சிவகுமாரன் கம்யூனிசக் கருத்துக்கள் கொண்ட நண்பர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் சமூக நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான்.
அதேவேளையில் தமிழர்களின் மிதவாத தலைமைக்கு மாற்றாக போர்க் குணம் கொண்ட தலைமை ஒன்றை கட்டியெழுப்ப முயற்சித்தோருடனும் இணைந்து செயற்பட்டான். ஆனாலும் அவன் பேசுவதைவிடவும் செயல் என்பதிலேயே அக்கறை கொண்டவனாக இருந்தான். அதனாலேயே பல செயற்பாடுகளைத் தனியாளாய் மேற்கொண்டு பொலிசாரின் கண்காணிப்புக்கு ஆளாகியிருந்தான்.
சிறையில் இருந்து வெளியே வந்ததன் பின்னர் இளைஞர்களுக்கான இயக்கம் அமைப்பதில் நான் அக்கறை காட்டிவந்தேன். ஆனால் சிவகுமாரன் அதில் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இருவரும் யாழ்ப்பாணம் கொட்டடியில் இயங்கி வந்த மீனாட்சி வணிகக் கல்லூரியில் கணக்கியல் படித்து வந்தோம். அந்தக் காலகட்டத்தில் போராட்டத்தில் அக்கறை கொண்ட யாழ்ப்பாண இளைஞர் பலரும் அங்கு படித்தார்கள் அல்லது சிறை, பொலிஸ் என்பவற்றில் இருந்து மீள்பவர்களுக்கான புகலிடமாக அது அமைந்தது என்றும் கூறலாம்.
தமிழ் இளைஞர் பேரவை அமைக்கப்பட்டதும் அதன் செயல்பாடுகள் சிலவற்றில் சிவகுமாரன் முகம் காட்டாமல் பங்கேற்றும் இருக்கிறான். 1973ன் பிற்பகுதியில் மலையக மக்களுடன் உறவைப் பேணவேண்டும் என்ற வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதில் சிவகுமாரன் ஆர்வத்துடன் பங்கேற்று எங்களுடன் மலையகம் வந்திருந்தான். மலையகத்தில் இருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பியபோது நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.(மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர்)
ஆனால் எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம். இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது. சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம்.
முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான். அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம். எங்கள் பணிகள் சுமுகமாகவே நடைபெற்றன. ஆனால் இருபாலைச் சந்தியில் இருந்து புறப்பட்ட இறுதிநாள் காண்பிய ஊர்திகள் பங்கேற்ற ஊர்வலத்தில் பண்டாரவன்னியன் பற்றிய காண்பிய ஊர்தி கலந்து கொள்வதற்கு மாநாட்டு அமைப்பாளர் அனுமதி மறுத்திருந்தனர்.
அரச நெருக்கடியை சமாளிக்க அமைப்பாளர்கள் எண்ணியிருக்க கூடும். சிவகுமாரன் தலைமையிலான தொண்டர்களாகிய நாங்கள் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்துபவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தகவல் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் ஊர்வலம் நகராதபடி தெருவை மறித்தபடி நாங்கள் மறியல் செய்தோம். மாநாட்டு அமைப்பாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் அளித்து கெஞ்சினர். ஆனால் சிவகுமாரன் எதற்கும் மசியவுமில்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை. கடைசியாக பண்டாரவன்னியன் காண்பிய ஊர்தியுடன் ஊர்வலம் நடைபெற்றது.
1974ஐன10 இறுதிநாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருநது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை. ஆதலால் சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக் கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக் கூட்டத்திற்கு ஒழுங்கு படுத்தியிருந்தனர். ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்துவிட்டது. ஆதலால் யாரும் எதிர்பாராத வகையில் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.
மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொணடர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது. உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான்.. அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம். எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர்.
நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்தற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம். வீரசிங்க மண்டபக் கட்டடிடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம். தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன. திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது. மேடையின் இடது பக்கத்தே அதாவது புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது.
பொலிசார் அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து் கொண்டிருந்தனர். சலசலப்பு உடனேயே அல்லோல கல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர். அவ்வேளையில்தான் அது நடந்தது. தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்ட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்கா ஒருவர் தொட்டபோதே எங்களைப் பார்த்து அலறியபடி வீழந்தார்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்பு கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள். எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம்.
காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லு}ர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள்;. சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
டேவிட் குஞ்சு என்றுதான் சிவகுமாரன் என்னை அழைப்பதுண்டு. நான் பொலிசாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கவில்லை. 1974-01-10ம் திகதியில் இருந்து 1974-06-05ம் திகதி வரையில் நான் அவனுடன் கூடவே இருந்தேன். எல்லாச் செயல்பாட்டிலும் பங்கேற்றேன். வெடிமருந்துகள் ஆயுதங்கள் தேடி சாதிய எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருக்கிறோம். நானும் சாவகச்சேரியை சேர்ந்த ஜீவராசாவும் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் சைனட்டைத் தேடிப் பெற்று வந்ததும், இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் ஓரு முப்பதாண்டுகளுக்கு முன்னான நிகழ்வு. இனி ஒரு தடவை பொலிசின் கையில் தான் பிடிபடுவதில்லை என்பதில் சிவகுமாரன் உறுதியாகவே இருந்தான். எங்களைப் பொலிசார் பிடித்தால் எல்லாப் பொறுப்பையும் தனது தலையில் சுமத்தி விடும்படியும் கூறியிருந்தான். இந்த ஐந்து மாத காலமும் ஒரு காவியத்திற்கான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன, எல்லாவற்றையும் இப்போது கூறுவதும் தேவையற்றதாகும். அவனது இறுதிக் கணம் வரைக்கும் நான் டேவிட்டாகவே இருந்தேன்.
பின்னாட்களில் எனக்கு வழங்கப்பட்ட குற்றப் பத்திரிகைகளிலும் இந்தப் பெயரே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் துயர நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிபர் சந்திரசேகராவை பழிவாங்குவதே எங்களின் நோக்கமாக இருந்தது. மிகச் சரியான அந்தத் திகதி எனக்கு நினைவில் இல்லை. கைலாசப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சந்திரசேகராவை மறித்துக் கொலை செய்வது என்பது எங்கள் திட்டமாக ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி எங்களுக்குப் பாரிய தோல்வியையே தேடித்தந்தது. சந்திரசேகரா உயிர் தப்பிவிட்டான் சிவகுமாரன் மிக உயர் தேடலுக்கு உரியவனாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1974ம் ஆண்டில் அவனது ஊரான உரும்பராய் கிராமம் எழுநூறு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டைக்கு உள்ளானாது. இன்றைக்கு போராட்டம் முதிர்ந்த நிலையில் இவையெல்லாம் சாதாரணமாக இருக்ககூடும். இந்நிலையில் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தோம்.
இரகசிய கடல்வழி பயணத்திற்குத் தேவையான பணம் எம்மிடம் இருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுச் சேகரிப்பது எனது பணியாயிற்று. அப்போது புகழ்மிக்க பெண்மணி ஒருவர் "என்னிடம் தாலிக்கொடி மட்டும்தான் இருக்கின்றது" என்ற பொன்மொழியை உதிர்த்தார். எல்லோரும் கைவிரித்து விட்டார்கள். இந்திலையில்தான் பணம் தேடும் வேறு முயற்சிகளை ஆராயத் தொடங்கினோம். அப்போதுதான் சத்தியசீலனின் சகோதரி சத்தியசீலி பணியாற்றும் கோப்பாய் கிராமிய வங்கி எங்கள் கவனத்திற்கு வந்தது.
1974ம் ஆண்டு ஜுன் 5ம் திகதி காலை பத்து மணியளவில் மருதனார்மடத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட வாடகை வண்டியில் உரும்பிராயில் இருந்து நாங்கள் நால்வர் (சிவகுமாரன், மகேந்திரன், ஜீவராசா, நான்) கோப்பாய் நோக்கி பயணித்தோம். எங்கள் திட்டம் சொல்லளவில் மிகச் சிறந்ததாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் இறங்கியபோது கட்டுத் தோட்டாக்கள் கொண்ட எங்கள் ஆயுதங்கள் எதுவும் ஒத்துழைக்கவில்லை. ஒன்று பிழைக்க மற்றவையெல்லாம் குழப்பமாகிவிட்டன. கார்ச்சாரதி திறப்புடன் ஓடிவிட்டான். திறப்பில்லாமல் காரை இயங்கச் செய்ய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊர்மக்கள் கூடிவிட்டார்கள். எங்கள் கால்களை நம்பி குடிமனைகளுக்கு ஊடாக ஓடத்தொடங்கினோம். கொள்ளைக்காரர் என்றபடி மக்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். கற்காளால் எறியத் தொடங்கினர். ஊர்மனை தாண்டி தோட்டப்பகுதிக்கு வந்துவிட்டோம்;
. வெடிக்காத கட்டுத் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியைக் காட்டி துரத்தி வருபவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் யார், எதற்கு வந்தோம் என்பதை விளங்கப்படுத்தினோம். சிவகுமார் தன்னை அறிமுகப்படுத்தியதும் சிலருக்கு அவனைத் தெரிந்திருந்தது. நாங்கள் மெதுவாக ஆசுவாசப்படுத்தியபடி நீர்வேலி நோக்கி தோட்ட வரப்புகள் வழியே நடக்கத் தொடங்கினோம். ஊர்மக்கள் பின்னே எங்களைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எதிரே மண்பாதையில் விரைந்து வந்த பொலிஸ் வாகனங்கள் எங்களை வழிமறித்தன.
பின்னால் திரும்பிய போது அங்கேயும் பொலிசார் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நாங்கள் முற்றுகைக்குள் மாட்டப்பட்டோம். இப்போது எல்லோரது கைகளிலும் இருந்த குண்டுகள் இல்லாத ஆயுதங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. நால்வரும் ஓன்றாகப் பிடிபடாமல் நான்கு திசையில் பிரிந்து ஓடி, போக்கு காட்டுவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். இதனால் சிவகுமாரன் உட்பட எல்லோரும் தப்ப முடியுமென்று நம்பினோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக சிவகுமாரனே பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தான். உண்மையில் அப்போது யார் சுற்றிவளைக்கப்ட்டார் என்பதனை நான் அறிந்திருக்கவில்லை. நான் ஓரு வாழைத் தோட்டத்திற்குள் மறைந்து நடந்தபடி வெகுதூரம் வந்திருந்தேன். எனது சாரத்தின் மடிப்பிற்குள் ஆயுதங்கள் கனத்தபடி இருந்தன. என்னைப் பொலிஸ் துரத்தவில்லை என்பது உறுதியாயிற்று. வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
நான் புன்னாலைக் கட்டுவன் வந்து சேர்ந்துவிட்டேன். என்னைக்கண்டதும் அபயமளித்தவர்கள் ஏங்கிப் போனார்கள். அப்போதுதான் என்னால் முழுத்தகவலையும் அறிய முடிந்தது. அந்த இடத்திலேயே சிவகுமாரன் பிடிபட்டதாகவும் அவனது காலில் மரவள்ளித்தடி குத்திக் காயமாகி வீழ்ந்து விட்டதாகவும் அந்த நிலையிலும் பொலிசாருடன் போரடியதாகவும் இறுதியில் அவன் சயனைட் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்ற இருவரும் மாலையில் குடிமனைக்குள் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
நான் யாழ்ப்பாண வைத்தியசாலைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
மாலை ஐந்து மணியிருக்கும். யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி பொலிசாரால் நிறைந்திருந்தது. நான் வேறு வழியால் உள்நுழைந்தேன். ஏனெனில் வைத்தியசாலை எனக்கு மிகப் பழக்கமானது. எனது அம்மா, அம்மாவின் தோழிகள், எங்களுக்கு ஆதரவான மருத்துவர்கள், ஊழியர்கள் என என்னை அறிந்த பலர் அங்கிருந்தனர். பொலிஸ் காவலையும் தாண்டி நான் சிவகுமாரன் அருகே சென்றுவிட்டேன். சிவகுமாரனின் அம்மா அங்கு இருக்கின்றார். சிவகுமாரனின் அதே சிரிப்பு அதே மலர்ச்சி. டேவிட் குஞ்சு என்று அழைக்கின்றான். சயனைட் பிழைச்சிட்டுது போல கிடக்குது இவங்கட விசாரணைக்குப் போகக் கூடாது வழியைப் பார் என்கிறான்.
வெளியே வந்து நண்பர்களுடன் திட்டமிடுகிறேன். திட்டமொன்று வகுக்கப்படுகின்றது. யாழ்ப்பாண மின்சார நிலையத்தில் எனது சிறை நண்பன் ஒருவன் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனிடம் உதவி கோருகிறேன். நாங்கள் குறிப்பிடும் நேரத்திற்கு மின்சாரத்தை தடைப்படுத்துவதாக உறுதி கூறுகிறான். மற்றைய ஏற்பாடுகளில் ஈடுபடுகின்றோம். உங்கள் முயற்சியை நிறுத்துங்களென சிவகுமாரனது மரணச் செய்தி எங்களை வந்து சேர்கின்றது. அவனது இறுதி ஊர்வலத்திலும் சடங்கு நிகழ்விலும் நான் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் சிவகுமாரன் மரணித்த மறுநாளில் இருந்து நான் தேடப்படுபவனாக மாறியிருந்தேன்.
பத்திரிகையிலும் பெயர் அடிபடத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அவனது இறுதி ஊர்வலத்தை நான் பார்த்தேன். நான் பார்க்கும் படியாக ஊர்வலப் பாதை மாற்றப்பட்டது. அவனது சிதையில் மூட்டப்பட்ட தீ தகதகதகவென இன்னமும்தான் எரிந்து கொண்டிருக்கின்றது. எனது கவிதையில் குறிப்பிட்டது போல்
முதல் வித்து நீ
முன்னறிவித்தவன் நீ
சாத்வீகப் பாதையில்
சந்தி பிரித்தாய்
கால வெளியில்
சுவடுகள் பதித்தாய்
காலக் கரைவிலும்
உந்தன் சுவடுகள்...
ஈழப்போராட்டத்தின் ஒரு பொறியாய் அக்கினிக் குஞ்சாய் இளைஞர்களின் குறியீடாய் எங்கள் தலைமுறை தாண்டியும் அவன் இருப்பான்.

-கி.பி.அரவிந்தன்-


No comments