பிசு பிசுத்தது ஒழுங்கமைப்பற்ற கடையடைப்பு !

வட தமிழீழம், வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் விவகாரத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் விடுக்கப்பட்ட அரைநாள் கடையடைப்புக்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கம்போல மக்கள், வர்த்தகர்கள் தமது வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமே இந்த அரைநாள் கடையடைப்புக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை அழைப்புவிடுவித்தது. கட்சிகள், பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காமல் பகிரங்க அழைப்பாகவே இதனை விடுப்பதாக கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையிலேயே அரைநாள் கடையடைப்புக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் உள்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சாமாசங்களின் சம்மேளங்களைச் சேர்ந்தோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடலட்டைத் தொழிலை முன்னெடுக்கும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரியும் கடலட்டைத் தொழிலாளை வடக்கில் தடை செய்யக் கோரியும் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்துக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்று யாழ். மாவட்ட செயலகத்துக்குச் சென்று மனுக் கையளிப்பது என்று சமாசங்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்தனர்.
எனினும், இந்த போராட்டம் ஒரு தன்னிச்சையான போராட்டமென்ற விமர்சனம் எழுந்ததையடுத்து, இன்றைய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. யாழ் நகரம், மானிப்பாய், திருநெல்வேலி, நெல்லியடி உள்ளிட்ட நகரங்கள் வழக்கம்போல இயங்குகின்றன. சாவகச்சேரியில் மட்டும் சில கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, காரைநகர், வலந்தலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட வரவேற்பு அலங்கார வளைவு திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு இடம்பெறுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
அந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னரே கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் பேரணி ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

No comments