பெண் ஒருவரைக் கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி - பாட்டாளிபுரத்தில் கண்டனப் போராட்டம்


பாட்டாளிபுரத்தில் பெண்பொருவரைக் கழுத்து அறுத்துக் கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியைக் கண்டித்து இன்று (9.6.2018) காலை 10 மணிக்கு பாட்டாளிபுரம் நாகம்மாள் கோவிலுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில்  மக்கள் அணிதிரளாதிருக்கும் பொருட்டு பொலிசார் வீடு வீடாக போராட்டத்திற்குச் செல்ல வேண்டாம் எனத் தடுத்திருந்தனர்.

எனினும் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சி உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இக்கொலைமுயற்சி தொடர்பாக காவல்துறை கவலையீனமாகச் செயற்படுவதுடன் இப்போராட்டத்தை தடுக்க முற்பட்டதன் அடிப்படையில் பார்த்தால் பொலிசார் கொலையாளிகளைத் தப்பவைக்க முயற்சிப்பதான சந்தேகம் எழுகின்றது என்றும், அச்சந்தேகத்தை நீக்கி கொலைமுயற்சியாளர்களையும் அதற்கு உடந்தையானவர்களையும் சட்டத்தின் முன்நிறுத்தி கொலைமுயற்சிக்குள்ளான பெண்ணுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதுடன் கிராமத்திலுள்ள மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் பிரதேசசபை உறுப்பினர் திரு.சத்தியரூபன், வெருகல் பிரதேசசபை உறுப்பினர் திரு. சிவனேசன், மாவட்டச் செயலாளர் திரு.குகன், வட்டார இணைப்பாளர்கள் கரன் மற்றும் கணேஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டைபறிச்சான் வட்டாரப் பிரதேசசபை உறுப்பினர் திருமதி. காருண்யா , பாட்டாளிபுர சனசமூக நிலைய உறுப்பினர் திரு.பண்பரசன் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.




No comments