பாவப்பட்ட பணம்:அதனையும் சுருட்டிய இலங்கை காவல்துறை!


வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கென கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சேர்ப்பித்த பணத்தில் 963ரூபாவை இலங்கை காவல்துறை சுருட்டிவிட்டதாவென மற்றொரு வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

துவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிற்கென மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.


இருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்றிருந்தனர். அச்சமயம் எதிர்க் கட்சித்தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரும்; கையேற்க மறுப்புத்தெரிவித்திருந்தனர்.

இதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த இலங்கை காவல்துறையினர் வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணமாக 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவர்களது பணத்தில் 963 இனை வீட்டிலிருந்த காவல்துறையினரா அல்லது காவல்நிலையத்திலிருந்த காவல்துறையினரோ சுருட்டியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் காவல்துறையில் சந்தேகத்தை எழுப்பி செய்திகளை பிரசுரிப்பது தொடர்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

No comments