காணாமல் போனோர் விவகாரம்:டக்ளஸிற்கும் வந்தது கண்ணீர்!

காணாமல் போனோர் அலுவலகங்களின் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லையென காணாமல் போதல்களின் சூத்திதாரிகளுள் ஒருவரான டக்ளஸ் தெரிவித்துள்ளார். இவ்வலுவலகம் கண்துடைப்புச் செயற்பாடாகவோ, நீதியைக் கோரிநீற்கும் தமிழ் மக்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தி காலாவதியாக்கும் செயற்பாடாகவோ அமைந்துவிடக்கூடாது எனவும் டக்ளஸ் வியாக்கியானமளித்துள்ளார்.


1990ம் ஆண்டு தீவகப்பகுதிகளை இராணுவம் கைப்பற்றிய போதும் ,1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்ததை அரச படைகள் கைப்பற்றியதன் பின்னருமாக இராணுவத்துடன் இணைந்து ஆயிரக்கணக்கானவர்களை கடத்தி காணாமல் போகச்செய்வதில் ஈபிடிபி முக்கிய பங்கை ஆற்றியிருந்தது.
அதே போன்றே கொழும்பிலும் இறுதி யுத்த காலப்பகுதியிலும் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை ஈபிடிபி அரங்கேற்றியிருந்தது.
இந்நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட பரணகம விசாரணைக்குழு முன்தோன்றிய பல குடும்பங்கள் ஈபிடிபி எவ்வாறு இராணுவத்துடன் சேர்ந்து ஆட்கடத்தலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் மீண்டும் தனக்கு தலையிடியை தருமென டக்ளஸ் கருதுகின்றார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை செய்வதற்காக என்று கூறி கடந்தகாலங்களில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசுகள் பல ஆணைக் குழுக்களை அமைத்தனவே தவிர அந்த ஆணைக்குழுக்களிடமிருந்து எமது மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

  ஆணைக்குழுக்கள் அமைக்கும் அரசாங்கங்களின் முயற்சிகள் காலம் கடத்தும் தந்திரோபாயங்களாகவே இருந்தன. அதுபோன்ற ஒருகாலம் கடத்தும் முயற்சியாக இந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடும் அமைந்து விடுமோ என்ற அவநம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் இருக்கின்றனரென டக்ளஸ் மேலதிக விளக்கமுமளித்துள்ளார்.


காலத்துக்குக் காலம் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் கவனத்தில் கொண்டு, குற்றவாளிகளாக அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகளை, சுதந்திரமாக இவ் அலுவலகத்தினரால் முன்னெடுக்கமுடியுமா? என்றும், காணாமல் போனவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற தடுப்புமுகாம்களில் சுதந்திரமாக விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா? என்றும் எம்மக்களிடையே கேள்விகள் இருக்கின்றதெனவும் டக்ளஸ் கவலை தெரிவித்துள்ளார்.

No comments