அமைதியான பிரார்த்தனையே தேவை!முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தினை இம்முறையும் தாமே பொறுப்பேற்று நடத்தவேண்டுமென வடமாகாணசபை வாதிட்டுவருகின்ற நிலையில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதுக்கும் அனுமதிக்க முடியாதெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்படும். நினைவு தினத்தை தனிப்பட்ட வகையில், தனிக்கட்சிகள் தனியான இடங்களில் நடாத்தாது, பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நினைவுகூர முன்வர வேண்டும்.

அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், மாற்றுக்கட்சிகளை நோக்கி முன்வைக்கும் கருத்துக்களுக்கும் அஞ்சலி நிகழ்வில் இடமில்லை. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருவோர் அமைதியாக அஞ்சலி செலுத்த வேண்டுமென்பதுடன், இறந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக உரையாற்றுவதுக்கு அனுமதிக்க முடியாது. கடந்த காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உரைகள் தடையாக இருந்தன. அரசியலுக்கு அப்பால், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுக்கு 2 நிமிடங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய ஒருங்கமைப்புக்களைச் செய்து இரண்டொரு நிமிடங்கள் பேச இடமளிக்க முடியும். கட்சி பேதம் கடந்து மனித நேயம் என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments