முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றாகவே! முதலமைச்சர் மாணவர்கள் சந்திப்பில் முடிவு!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தரப்புக்களும் இணைந்து உணர்வு பூர்வமாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்திருந்ததுடன் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பிற்கும் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகளும் மதத்தலைவர்கள்,மூத்த போராளிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னராக ஊடகங்களிடையே மாணவ பிரதிநிதிகள் பேசியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை இணைந்து முன்னெடுப்பது தொடர்பாக உரையாடப்பட்டு எந்தவித ஆட்சேபனையும் இன்றி ஒரே நிகழ்வாக அதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதனை கூட்டாக உணர்வுபூர்வமாக நடத்தவும்,பொதுச்சுடரை உத்தியோகபூர்வமாக முதலமைச்சர் கையளிக்க பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பிரதிநிதியொருவர் ஏற்றுவார் என்பதும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனத்தை முதலமைச்சரே ஆற்றவேண்டுமென மாணவ பிரதிநிதிகள் கோரிக்கையினை முன்வைத்திருந்த நிலையில் அவரும் ஏற்றுக்கொண்டிருந்தார். இதனிடையே மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் பத்து அம்சக்கோரிக்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருந்த நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாணசபை ஏற்கனவே முன்னேற்பாடுகள் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களிடமும் வேலைகளை ஒதுக்கியிருப்பதால் அவற்றை மீளாய்வு செய்து மாணவர் பிரதிநிதிகளையும் பொது அமைப்புக்களினையும் இணைத்துக்கொள்வது தொடர்பான கூட்டம் நாளை முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பினரை பங்கெடுக்க அழைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பொது அமைப்புக்கள் முள்ளிவாய்க்கால் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

No comments