விசாரணைகளின்றி இழுத்தடிக்கும் இலங்கை காவல்துறை!

இலங்கை காவல்துறையினர் தமது விசாரணைகளை விரிவுபடுத்தாமல் திரும்ப திரும்ப ஒரே அறிக்கைகளை நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க திட்டமிடுவதாக இலங்கை காவல்துறையினரை இன்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையம் மீதும்  அதன் உரிமையாளர்கள் மீதும் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை கொண்ட கும்பலொன்று தாக்குதலை நடாத்தியது. இக்கும்பலின் தலைவர் என கருதப்பட்டவரின் பிறந்த நாளை கொக்குவில் சந்திப்பகுதியில் கேக் வெட்டி கொண்டாட முயன்றமையே இத் தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக அமைந்திருந்ததாக சொல்லப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக எட்டுப் பேர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நால்வர் தொடர்ச்சியாக நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தொடர்பான வழக்கு  இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இச்சம்பவம் தொடர்பாக பெற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பு கமராவின் காணொளிகள் அடங்கிய இறுவட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான அறிக்கை கிடைக்கும் வரை சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.

விளக்கமறியலில் வைப்பது சந்தேகநபரொருவருக்கு தண்டனையாக அமையாது என கூறி இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஏனைய இருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

No comments