முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு வருவதை தடுக்க எவருக்கும் உரிமையில்லை! - சுரேஷ் பிரேமச்சந்திரன்


தமிழினத்துக்காக இன்னுயிர்களைத் தியாகம் செய்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு நீ வராதே, நீ வா என ஆணையிடுவதற்கு எவருக்கும் அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. எனவே, அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து நினைவு நாளைக் கொண்டாடுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பை நாம் வரவேற்கின்றோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவுநாளை அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து கடைப்பிடிக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அழைப்பு தொடர்பாகவே அவர் இதனைத் தெரிவித்தார். போரில் உயிரிழந்த எவருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்த முடியும். அதனைத் தடுக்க எனக்கோ அல்லது ஏனைய தரப்புகளுக்கோ அதிகாரமில்லை. நினைவிடத்துக்கு வருபவர்களை எவரும் தடுக்க முடியாது. உதாரணத்துக்கு கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து எமது இனத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கூட அங்கு வந்து அஞ்சலி செலுத்தினால் அதனைத் தடுக்க எமக்கு உரிமையில்லை. கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபையே ஒழுங்கமைத்து வந்தது. காலப்போக்கில் பல தரப்புகளும் ஒவ்வொரு பிரிவுகளாக நினைவு கூர்ந்து வருகின்றனர். இதனாலேயே அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைந்து வருமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்தது. இது வரவேற்கத்தக்கது. நாங்கள் பிரிந்து நின்று நினைவு கூருவதைவிட ஒற்றுமையாக இணைந்து நினைவுகூர வேண்டும். மேலும் எமது எதிர்கால சந்ததிகள் வருடா வருடம் இந்த நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்யவேண்டும் என்றார்.

No comments