சும்மா கிடந்த சங்கை சுமந்திரன் ஊத மக்கள் விருப்புக்கு விடை கிடைத்தது! பனங்காட்டான்

"விருப்பமில்லாது இப்பதவிக்கு வந்த விக்னேஸ்வரனை தொடர்ந்தும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல என்று நையாண்டித்தனமாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு, என்மேல் இருக்கும் உருக்கத்தாலும் பாசத்தினாலும் பரிவினாலும் என்னைக் க~;டப்படுத்தக்கூடாதென்று எனது மாணவர் அடுக்கிய காரணங்களின் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிவர் என்ற முதலமைச்சரின் கூற்றானது, சுமந்திரனின் முகத்தில் கைகளைப் பொத்தி ஓங்கிக் குத்தி நிலத்தில் வீழ்த்தியது போன்றது. "

வடமாகாண சபையின் ஆயுட்காலம் இன்னமும் ஐந்து மாதங்களில் முடிவடையப் போகிறது.

உடனடியாக அடுத்த சபையை தெரிவதற்கான தேர்தல் நடைபெறுமா? அல்லது சிலகாலத்துக்கு ஆளுனர் ஆட்சி இடம்பெறுமா?

மாகாணசபைத் தேர்தல் முறைமையை மீண்டும் பழைய விகிதாசார முறைக்குக் கொண்டு செல்ல அரசாங்க தரப்புக் கட்சியினர் மட்டுமன்றி, சகல தமிழ் முஸ்லிம் கட்சிகளும் விரும்புகின்றன.

வட்டாரத் தெரிவு முறையும் விருப்புத் தெரிவு முறையும் கலந்த தேர்தல் அடிப்படையில் நடைபெற்ற அண்மைய உள்;ராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய களேபரம், அதனை மாற்றியமைக்க அனைவரையும் தூண்டியுள்ளது.

மீண்டும் பழைய விகிதாசார முறைமையை அமுல் செய்வதானால் புதிய தேர்தல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஜனாதிபதி திடுதிப்பென விசேட வர்த்தமானி மூலம் நிறைவு செய்துள்ளார்.

அரசாங்கத்தின் கூட்டுத் தலைமைக்குள் ஏற்பட்டுள்ள பிசகைத் தீர்க்க அவருக்கு காலம் தேவைப்படுகிறது.

அடுத்த கூட்டத்தொடர் மே மாதம் 7ம் திகதி ஆரம்பமாகும்.

அதன் பின்னரான நான்கு மாதத்துள் புதிய தேர்தல் சட்டமூலத்தைத் தயாரித்து, நாடாளுமன்றில் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி, சட்டமாக்கி தேர்தல் திணைக்களம் தயாராக இக்குறுகிய காலம் போதாது.

இப்போதுள்ள அரசியல் நிலைமையில் இதனைச் சட்டமாக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை (225ல் 150 எம்.பிக்களின் ஆதரவு) பெறுவது சாத்தியமற்றது எனவும் நோக்க வேண்டியுள்ளது.

இப்படியான தடங்கல்களால் வடமாகாண சபைத் தேர்தல் பின்போடப்பட்டு இழுபடக்கூடுமென்பதே யதார்த்தம்.

இதனை எழுதும்போது, வடமாகாண சபைக்கு ஆளுனராகவிருந்த றெஜினோல்ட் கூரே மத்திய மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பதவியேற்றபின், மீண்டும் வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட செய்தி வந்துள்ளது.

வடமாகாண ஆளுனராக நியமனமாகவிருந்த மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் வடமேல் மாகாண ஆளுனராகியுள்ளார். இதனால் தமிழரொருவர் வடக்குக்கு நியமனமாகவிருந்த சந்தர்ப்பம் ஜனாதிபதியால் மறுக்கப்பட்டுள்ளது. 

இப்படியான குழப்பச் சூழ்நிலையில் வடமாகாணசபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? யாருக்கு அதிகூடிய சாதக நிலை காணப்படுகிறதென்பது திடீரெனப் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கான முதற்கல்லை வீசி, குட்டையைக் குழப்பி விட்டிருப்பவர் கூட்டமைப்பின் பேச்சாளர் என்று கூறப்படும் எம்.ஏ.சுமந்திரன்.

குதர்க்கமான பேச்சினாலும், குழப்பமான செயற்பாடுகளாலும், அரசியல் விநோதங்களை நிகழ்த்தி வரும் இவர் நிச்சயமாக இந்தக் கல்லை சும்மா வீசி இருக்க மாட்டாரென்பது திண்ணம்.

தமிழர் சமூகத்தில் நன்கு மதிக்கப்படுபவராக விளங்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்கால அரசியல் நிலைப்பாடை காலந்தாழ்த்தாது அறிந்து, அதற்கேற்ப தமது காய்களை நகர்த்த வேண்டுமென்பதே இந்தக் கல்வீச்சின் அடிப்படை.

சட்டக் கல்லூரியில் தம்மிடம் சட்டம் பயின்று சட்டவாளரான சுமந்திரனின் இருப்பையும் இலக்கையும் துல்லியமாகக் கண்டறியும் வல்லமை பெற்ற சட்டக் குருவான விக்னேஸ்வரன், எதிர்பார்த்திருந்த அந்தக் கல் சற்று முற்கூட்டி எறியப்பட்டது அவர் எதிர்பார்க்காதது.

எனவே, குட்டையை மேலும் குழம்பவிடாது சுமந்திரன் வீசிய அதே கல்லை எடுத்து அநாயாசமாக திருப்பி வீசி, சுமந்திரன் எதிர்பார்த்திராத முடிவை விரைவாகவே விக்னேஸ்வரன் கொண்டு வந்து விட்டார்.

நடந்ததன் சுருக்கம் இதுதான்.

கடந்த 7ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தை இனிமேல் கூட்டமைப்பு வழங்காது என்று சுமந்திரன் அழுத்தம் திருத்தமாக அறிவித்தார்.

“இவரை நாங்களே அரசியலுக்கு அழைத்து வந்தோம். இரண்டு வருடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறி வந்தவர் முழுமையாக இருந்துவிட்டார். ஆகையால் அவரை மேலும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல”  என்பது சுமந்திரன் கூறிய காரணம்.

விக்னேஸ்வரன் மீது பரிதாபப்பட்டு, அவர் நலனுக்காக அவர் விரும்பியவாறு அவருக்கு வேட்பாளர் நியமனம் இனி வழங்குவதில்லையென்பது சுமந்திரன் கூற்றின் அர்த்தம்.

மறுநாள், கூட்டமைப்பில் இறுதியாக இணைந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் தமது கருத்தை வெளியிட்டார்.

“சுமந்திரன் தெரிவித்தது கூட்டமைப்பின் முடிவல்ல. கூட்டமைப்பு அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் கூறியது தமிழரசுக் கட்சியின் முடிவாக இருக்கலாம்” என்பதே சித்தார்த்தன் சொன்னது.

கூட்டமைப்பின் மற்றொரு பங்காளியான ரெலோவின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமது கருத்தை இப்படிக் கூறினார்”

“கூட்டமைப்பில் அப்படி ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. விக்னேஸ்வரன் அப்பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்தால் அது பற்றிப் பரிசீலிக்கப்படும்” என்பது இவரது கருத்து.

இது பட்டும்படாத, ஐம்பதுக்கு ஐம்பது போன்ற நிலைப்பாடு.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனின் இது தொடர்பான கருத்து திருமலையிலிருந்து வந்தது.

“பொருத்தமான ஒருவரை பொருத்தமான நேரத்தில் தெரிந்தெடுத்து நிறுத்துவோம். இதுவரை எந்த முடிவும் இல்லை” என்பது இவரது கூற்று.

இதற்கிடையில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் முதலமைச்சர் பதவி மீது தமக்குள்ள  நாட்டத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி, குட்டையை மேலும் குழப்ப முயல்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் வேட்பாளராக இப்பதவிக்கு வர விருப்பப்பட்ட அல்லது முயன்ற மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், பத்திரிகையாளர் வித்தியாதரன் ஆகியோரிடமிருந்து இதுவரை எந்தப் பிரதிபலிப்பும் வெளிவரவில்லை.

சுமந்திரனின் கருத்துக்கு விக்னேஸ்வரன் தெரிவித்த ஆணித்தரமான பதில் சூடும் குளிரும் இணைந்த கலவையாகவும், நெற்றியில் ஆணியை ஏற்றுவதுபோலவும் அமைந்துள்ளது.

இந்த அறிக்கையின் சில விடயங்களை மட்டும் இங்கு சுட்டுவது முக்கியம்.

அடுத்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதை விக்னேஸ்வரன் நிச்சயப்படுத்தி பகிரங்கமாக்கியுள்ளார்.

தாம் செல்லுமிடமெங்கும் மக்கள் அதனை விரும்பிக் கேட்பதால் தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நலன் கருதி, கொள்கை ரீதியாக தம்முடன் சேர்ந்தியங்கக்கூடிய வேறொரு கட்சியூடாக தாம் வேட்பாளராக நிற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி ஆரம்பிக்கையில், கொள்கை ரீதியில் உடன்படுவோரோடு கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ள தமது விருப்பத்தையும் இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்காக, யாரால் உருவாக்கப்பட்டதென்பது எல்லோருக்கும் தெரியும். அதன் தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் ஆகிய அடிப்படைக் கூறுகளை இன்றைய கூட்டமைப்பு கடைப்பிடிக்கிறதா? இதில் எத்தனை ஸ்தாபகக் கட்சிகள் இன்றுள்ளன என்ற நியாயமான கேள்விகளையும் முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.

கூட்டமைப்பு என்பது இன்று இல்லாதவிடத்தில் எங்கிருந்து தமக்கு அழைப்பு வரும் என்று கேட்டிருக்கும் விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியிடமிருந்து தமக்கு அழைப்பு வராதென்பதை மறவாது குறிப்பிட்டுள்ளார்.

133,000 மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற தம்மீது மாகாண சபையில் கூத்தாட்டம் நடத்தப்பட்டதையும், கூட்டமைப்பின் சர்வாதிகாரப் போக்கு இதனூடாக வெளிப்பட்டதையும் முதலமைச்சர் இங்கு கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இனப்படுகொலை, போர்க்குற்றம் ஆகியவற்றை யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் அவர்கள் மறைக்க முற்படுவதைப்போல் தம்மால் முடியாதுள்ளது என்பதையும் இந்த அறிக்கை வாயிலாக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

விருப்பமில்லாது இப்பதவிக்கு வந்த விக்னேஸ்வரனை தொடர்ந்தும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல என்று நையாண்டித்தனமாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு என்மேல் இருக்கும் உருக்கத்தாலும், பாசத்தினாலும், பரிவினாலும் என்னைக் க~;டப்படுத்தக்கூடாதென்று எனது மாணவர் அடுக்கிய காரணங்களின் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிவர் என்ற முதலமைச்சரின் கூற்றானது, சுமந்திரனின் முகத்தில் கைகளைப் பொத்தி ஓங்கிக் குத்தி நிலத்தில் வீழ்த்தியது போன்றது.

2015ம் ஆண்டுத் தேர்தலில் 75 முதல் 80 வீதமான வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு, கடந்த உள்;ராட்சித் தேர்தலில் 35 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது ஏன் என்று பிரேத பரிசோதனை நடத்தும் சுமந்திரனுக்கு அதன் காரணங்கள் புரியாதிருப்பது விந்தையானது.

கூட்டமைப்பை சின்னாபின்னமாக்குவது, வடமாகாண சபைக்குள் கூட்டமைப்பை இரண்டாக்கி நெருக்கடிகளை உருவாக்குவது, முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது போன்ற பல பல காரணங்களால் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியே இதற்கான முக்கிய காரணம்.

இதுபோதாதென்று, கூட்டமைப்பை மேலும் அதலபாதாளத்தில் தள்ளி அழித்தொழிக்க முதலமைச்சர் வேட்பாளர் யாரென்ற பிரச்சனையை சுமந்திரன் உருவாக்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட ஒரு நச்சுப்பாம்பை அந்தக் கூட்டுக்குள் தள்ளிய பேரினவாதி யாரென்பதே பலரையும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி?

No comments