பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..!


சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் சிலர் உயரமான அறிவிப்பு பலகையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். சீமான் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாரதிராஜா உள்ளிட்டோர் சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் சீமான் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார். ஏற்கனவே போராட்டத்தின்போது காவலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் சிறிதளவில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே சிட்லப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பாரதிராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே  மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என கூறிவிட்டு மண்டபத்தின் உள்ளே இன்னும் இருக்கிறார்

No comments