இனப்படுகொலையாளிக்கு சட்டமா அதிபர் பாதுகாப்பு?
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியான படை அதிகாரிக்கு சார்பாக அரசு நீதிமன்றில் ஆஜராகவுள்ளது. அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று அனுமதியளித்து கட்டளை வழங்கியுள்ளது.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.
9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து ,இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.மனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Post a Comment