அதிகாரிகள் பெயரில் மாபியாக்கள்:முதலமைச்சர் சீற்றம்!
வடமாகாணசபையினை சுமூகமாக செயற்படவிடாது குழப்பிவரும் உயரதிகாரிகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இன்றிரவு ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயுடன் கொழும்பில் அவசர சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளார்.
வடமாகாணசபையின் நிர்வாகத்தை சுமூகமாக முன்னெடுக்க ஏதுவாக நோய்வாய்ப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்றுவரும் ஆளுநரை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதுடன் அது தொடர்பில் ஊடகங்களிற்கு அறிக்கையிட்டுள்ளார்.
வடமாகாணசபையினை சுமூகமாக இயக்கமுடியாதிருப்பதற்கு முக்கிய காரணமாக கடந்த 20 வருடங்களிற்கு மேலாக வடக்கிலேயே ஓட்டிக்கொண்டிருக்கின்ற நிர்வாகசேவை அதிகாரிகளில் ஒரு பகுதியினரே காரணமென முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவர்களில் சிலர் ஆளுநருக்கும்; முதலமைச்சரிற்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்தி மாகாண சபையின் வேலைகளை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் இன்றிரவு முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றும் ரவீந்திரன் கொழும்புக்கு இடமாற்றப்பட்டுவிட்ட போதும் அது அமுல்படுத்தப்படமுடியவில்லை. அவர் கடந்த ஆண்டின் செப்டெம்பர் முதலாம் திகதி இடமாற்றப்பட்டார். பின்னர் தேர்தல் காரணமாக அவர் மேலும் இடமாற்றதிலிருந்து நீட்டிப்பு பெற்றிருந்தார்.
தேர்தலின் பின்னராக அவரை இடமாற்றத்தின் கீழ் விடுவித்தபோது அவர் போகவில்லை. அவர் பத்து நாட்களுக்கு முன்னர் தன்னை ஆளுநர் விடுவிக்காதிருப்பதால் கொழும்பிற்குச் செல்ல முடியாது எனத்தெரிவித்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு மாகாணத்தில் தேங்கி நிற்கும் நிர்வாகச்சேவை உத்தியோகத்தர்கள் பலர் உள்ளனர். இடமாற்றம் தொடர்பான ஆளுநரின் கட்டளையை மீறி இப்போது இந்த அதிகாரிகள் மாஃபியாக்கள் போன்று முயற்சி செய்கிறார்கள். இவர்களில் சிலர் ஆளுநருக்கும் முதலமைச்சரிற்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்தி மாகாண சபையின் வேலைகளை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபையின் செயற்பாடுகளை முடக்கி முதலமைச்சரிற்கு சேறுபூச அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையிலும்,மறுபுறம் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலும் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.குறிப்பாக நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பலரும் முதலமைச்சரிற்கு கட்டுப்படாது ஆளுநரினது மறைப்பின் கீழ் குழப்பங்களை ஏற்படுத்திவருகின்றனர்.அவர்களையே மாபியாக்கள் என முதலமைச்சர் கடும் சீற்றத்துடன் விமர்சித்துள்ளார்.
Post a Comment