பேரம்படிவோருக்கு ஆதரவளியுங்கள்: கூட்டமைப்பிற்கு ஆலோசனை!

இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாதென யாழ்.மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் தரப்புக்களாயினும் சரி அல்லது அதிலிருந்து தப்பி பிழைக்க முற்பட்டுள்ள ரணில் தரப்பாயினும் சரி பேரம் பேசுவதற்கு கூட்டமைப்பிற்கு இலங்கை நாடாளுமன்றில் நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், தமிழ் அரசியல் கைதிகளது நிபந்தனையற்ற விடுதலை,மகாவலி குடியேற்ற திட்டத்தை நிறுத்துதல், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல்,சிங்கள மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்தல்,சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவ தலையீடு நீக்கப்படல், உள்ளிட்ட பதினொரு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்துள்ள யாழ்.மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இவற்றில் இயலுமானவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு கிடைத்த சந்தர்ப்பத்தில் வெல்வதற்கு பாடுபடவேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை,தமிழ் சிவில் சமூக அமையம்,இலங்கை ஆசிரியர் சங்கம்,யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,சமூக விஞ்ஞான ஆய்வு மையம்,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு,மலையக சமூக ஆய்வு மையம்,பசுமை எதிர்காலத்திற்கான நிலையம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு என்பவையே இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளன.

அரசியல் ஆய்வாளர் சி.ஜோதிலிங்கம், யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை தலைவர் ரி.கணேசலிங்கம், சட்டத்தரணி வீ.கே.சுபாகர் உள்ளிட்டவர்கள் அமைப்புக்களின் சார்பில் பிரதிநிதிகளாக பங்கெடுத்திருந்தனர்.

குறிப்பாக கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் தரப்புடன் பேரம் பேசுவதுடன் அவர்களின் பின்னாலிருக்கின்ற இந்திய மற்றும் மேற்குலக சமூகத்திற்கும் எமது கோரிக்கைகளை வெளிப்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம் இதுவொனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே இன்று காலை கொழும்பில்; இரா.சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியிருந்தனர்.
மறுபுறம் சுரேஸ்பிறேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சகிதம் ரணிலை சந்தித்து தனித்து பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments