அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பிலான முழுமையான விபரங்கள்


மகிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்றம் பிரதமரது அதிகாரத்தை மீள ஸ்தாபித்துள்ளது.
 
நேற்றையதினம் இந்த பிரேரணை மீதான விவாதம் 12 மணி நேரமாக இடம்பெற்றிருந்தது.
 
இதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், 46 மேலதிக வாக்குகளை அவநம்பிக்கை பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
 
பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 உறுப்பினர்களும் வாக்குகளைப் பயன்படுத்தி இருந்தனர்.
 
26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
வாக்கெடுப்பின் போது, சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்தனர்.
 
அத்துரலியே ரத்தன தேரரைத் தவிர ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அவநம்பிக்கை பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
 
அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டு வந்த முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் அவநம்பிக்கை பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தார்.
 
அவநம்பிக்கை பிரேரணை ஆதரிக்கவிருப்பதாக முன்னர் அறிவித்த ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோரும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.
 
அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆகிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள், பிரேரணையை எதிர்த்திருந்தன.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவநம்பிக்கை பிரேரணையை எதிர்த்திருந்தனர்.
 
ஜே வி பி யின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்திருந்தனர்.
 
நேற்றைய விவாதத்தில் பங்கேற்காதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ, வாக்கெடுப்பின் போது அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தார்.
 
ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா பிரேரணையை எதிர்த்து வாக்களித்தார்.
 
சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனேவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே, தரநாத் பஸ்நாயக்கே, சுசந்த புஞ்சிநிலமே, அனுரயாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, டி.பி.ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தனர்.
 
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, ஃபைசர் முஸ்தபா, மகிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜித் விஜித்தமுனி சொய்சா, பியசேன கமகே, எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லா, ஏ.எச்.எம்.பௌசி, லசந்த அலகியவண்ண, ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், அங்கஜன் ராமநாதன், வீரகுமார திஸாநாயக்க, மொஹான் லால் க்ரேரோ, சிறியானி விஜயவிக்ரம ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
அவநம்பிக்கை பிரேரணையில் கைச்சாத்திட்டிருந்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் காதர் மஸ்தானும் நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.
 
55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைச்சாத்துடன், கடந்த மாதம் 21ம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் குறித்த அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
 
இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முன்வைக்கப்பட்ட 47வது அவநம்பிக்கைப் பிரேரணை இதுவாகும்.
 
பிரதமர் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3வது அவநம்பிக்கை பிரேரணையும் இதுவாகும்.
 
இதற்கு முன்னர் மறைந்த பிரதமர்களான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கு எதிராக 1957ம் ஆண்டும், சிறிமாவோ பண்டாநாயக்கவிற்கு எதிராக 1975ம் ஆண்டும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
அந்த 2 அவநம்பிக்கை பிரேரணைகளும் தோற்கடிக்கப்பட்டிருந்தன

No comments