தனைமறந்து தன்நாமம் கெட்டுள்ள வடக்கின் புதிய ஒட்டுக் கூட்டமைப்பு! பனங்காட்டான்

தங்களுக்கு மூக்குப் போனாலும் எதிரியாகப் பார்க்கும் கஜேந்திரகுமார் அணிக்கு சகுனப் பிழையாக இருக்க வேண்டுமென்பதற்காக ஒட்டுக் குழுவெனக்கூறி காறியுமிழ்ந்தவரின் காலில் விழுந்துள்ள கூட்டமைப்பு, ஏகபோக தலைமைத்துவ திமிர் வெறியில் கூடாத கூட்டம்கூடி புதிய ஒட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்பது நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள பொருள் பொதிந்த ஒரு வாக்கியம்.

இது வாழ்வியலின் சகல துறைகளுக்கும் பொருந்தும். முக்கியமாக, அரசியல் செயற்பாடுகளுக்கே இதனை முன்னுதாரணமாகக் கொள்வர்.

ஆனால், இப்போது இலங்கையில் தமிழர் அரசியல் என்பது இதற்கும் அப்பாற் சென்றுவிட்டது.

நினைக்காதது, கனவிலும் காணாதது, எவரும் விரும்பாதது என்று அடிப்படை நெறிமுறையக்கு எதிராக சொல்லக்கூடிய எல்லாமே அங்கு தொடர்கதையாக இடம்பெறுகிறது.

தமிழர் தேசிய கூட்டமைப்புக்குள்ளிருந்து கொண்டு இத்தனை கைங்கரியங்களையும் தம் விருப்பப்படி மேற்கொள்பவர் ஒருவரே.

தமிழரசுக் கட்சியின் இக்கால வெளியீடான புதிய சுதந்திரன் என்ற பத்திரிகையில் வரும் சுதந்திரன் என்ற சொல்லின் இரண்டாம் எழுத்தை ஷம| என்று மாற்றிவிட்டால் அந்த அரசியல்வாதியை அடையாளம் காணலாம்.

இது போகட்டும்! இப்போது தமிழர் தரப்பு அரசியல் எத்திசை நோக்கிச் செல்கிறது?

கடந்த மாதம் 10ம் திகதி நடைபெற்ற உள்;ராட்சிச் சபை தேர்தல்களின் எதிர்பாராத முடிவு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது.

இத்தளத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் சுமந்திரனும் மாவை சேனாதிராஜாவும் நடத்தும் மாயாஜால வித்தைகள் பார்ப்பதற்கு விசித்திரமானவை.

கெடுகுடி சொற்கேளாது என்பார்கள். இங்கு சொல்வதற்கு யாருமில்லை. அதனால் குடி (வீடு) தம் விருப்பப்படி காய்களை அறம்புறமாக நகர்த்துகிறது.

இதற்கான அடிப்படைக் காரணங்கள் பலவுண்டு.

உள்;ராட்சி அதிகார அரசியலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கூட்டமைப்பு முதன்முறையாக எடுத்த முயற்சியில் கிடைத்த தோல்வி.

தமிழர் அரசியலில் ஏகபோக தலைமைத்துவம் தாங்களே என்று கொண்டிருந்த திமிருக்கு மக்கள் வழங்கிய சாட்டையடி.

தேர்தலில் போட்டியிட்ட மற்றைய கட்சிகளை (கஜேந்திரகுமார் அணியை) பார்த்து, இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற வரட்டுச் சித்தாந்தத்தில் எதிர்கால வெற்றி பற்றிக் கொண்டிருந்த கனவு சிதைக்கப்பட்டதால் கிடைத்த ஏமாற்றம்.

விலாவாரியாக அடுக்கப்பட வேண்டிய இந்தப் பட்டியல் நீளமானது.

உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் போட்டியிட்ட கூட்டமைப்புக்கு எவ்விடத்திலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சில சபைகளில் பெரும்பான்மை மட்டுமே கிடைத்தது.

பெரும்பான்மைக்கும் அறுதிப் பெரும்பான்மைக்குமிடையேயான வித்தியாசத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையில் 21 உறுப்பினர்களுக்கு மேலாக எவராவது வெற்றி பெற்றால் அது அறுதிப் பெரும்பான்மை.

ஆனால், 40 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையில் ஓரணிக்குப் பதினான்கு, இன்னொன்றுக்கு பன்னிரண்டு, மற்றொன்றுக்கு எட்டு, அடுத்ததொன்றுக்கு ஆறு ஆசனங்கள் கிடைத்திருப்பின், பதினான்கு  ஆசனங்களில் வென்றதை பெரும்பான்மை என்பர்.

இதன் காரணமாக தாயகத்தில் எந்தவொரு அணியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் இன்னொரு அணியின் ஆதரவு தேவைப்பட்டது.

தமிழரசின் கூட்டமைப்பு, தமிழ்க் காங்கிரஸின் தமிழ் தேசிய மக்கள் பேரவை, ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி, ஜே.வி.பி என்பவற்றுடன் மற்றும் சில சொரியல்களும் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு எதற்கும் அறுதிப் பெரும்பான்மை கிடையாது போயிற்று.

இந்த நிலையில், எவருடன் சேர்ந்தாவது சபைகளின் ஆட்சிக் கதிரைகளை கைப்பற்றும் திட்டத்தை கூட்டமைப்பு தீட்டியது.

கஜேந்திரகுமார் தமது பேரவை எந்த அணியுடனும் கூட்டுச் சேராதெனத் தெரிவித்தார். இதனைச் சாதகமாக எடுத்துக் கொண்ட கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யுடன் திரைமறைவில் பேசத் தொடங்கியது.

தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சித்தார்த்தன் ஆகியோர் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தினர்.

யாழ். மாநகரசபையின் ஈ.பி.டி.பி. நகர முதல்வர் வேட்பாளர் ரெமீடியசுடன் சுமந்திரன் பேசும் நிலையும் ஏற்பட்டது.

ரணில் - மைத்திரி அரசுடன் கூட்டமைப்பு மேற்கொண்ட எழுதாத ஒப்பந்தம்போல் ஈ.பி.டி.பி.யுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது,

ஆனாலும், யாழ். மாநகர முதல்வர் தெரிவில் ஓரங்க நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது.

கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் பேரவை, ஈ.பி.டி.பி. ஆகிய மூன்றும் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டன.

இறுதியில் ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் கூட்டமைப்பு அப்பதவியைப் பெற்றது.

ஈ.பி.டி.பி.இன் ஆதரவைத் தாங்கள் ஒருபோதும் கேட்கவில்லையென்று தெரிவித்தார் சுமந்திரன்.

அப்படியானால், டக்ளஸ் தேவானந்தா தாமாக முன்வந்து கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்கினாரா?

ஈ.பி.டி.பி. உடன் தாங்கள் கூட்டாட்சி அமைக்கவில்லையென்று கூசாமல் பொய் சொல்கிறார் மாவை சேனாதிராஜா.

அப்படியென்றால் டக்ளசுடன் இவர் தொடர்பு கொண்டு உரையாடிய விடயம் என்ன?

ஈ.பி.டி.பி.யை ஒட்டுக்குழுவென்று தாங்கள் அழைக்கவில்லையென்று இன்னொரு பொய்யைச் சொல்கிறார் மாவை சேனாதிராஜா.

ஆனால், எத்தனையோ தடவைகள் அறிக்கைகளிலும் கூட்டங்களிலும் ஒட்டுக்குழு என்ற பட்டம் சூட்டியே ஈ.பி.டி.பி.யை கூட்டமைப்பினர் சாடியது பழங்கதையல்ல.

அன்றொரு நாள் தேர்தல் பரப்புரைக்காக தீவுப் பகுதிக்கு சென்ற மாவையரும், ரெலோ வேட்பாளர் சிவாஜிலிங்கமும் ஈ.பி.டி.பி.இனால் தாக்கப்பட்டு கால்கள் முறிவடைந்ததை மக்கள் மறந்துவிடவில்லை.

இதற்காக இவர்கள் இருவரும் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோது இவர்களின் வாக்குமூலமே ஈ.பி.டி.பி.யைக் காட்டிக்கொடுத்தது.

இத்தாக்குதல் பற்றி நாடாளுமன்ற உரைகளில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஈ.பி.டி.பி.இன் பக்கம் விரல் நீட்டி குற்றஞ்சுமத்தினர்.

இப்போது அதே அணியுடன் பதவிக்கான ஒரு கூட்டு இது.

எதிரியின் எதிரி நண்பன் என்ற அரசியல் பொன்மொழி இங்கு வேலை செய்கிறது.

எக்காரணம் கொண்டும் எந்தவொரு சபையையும் கஜேந்திரகுமார் அணி கைப்பற்றக்கூடாது என்ற கூட்டமைப்பினதும், ஈ.பி.டி.பி.இனதும் கரிசனையே இன்று இவர்களை ஒட்ட வைத்துள்ளது.

இதற்கு மற்றுமொரு உதாரணம் சாவகச்சேரி சபை. இதில் பெரும்பான்மைப் பலத்தை கஜேந்திரகுமார் அணி பெற்றிருந்தும் ஈ.பி.டி.பி.இன் ஆதரவோடு கூட்டமைப்பு அதைக் கைப்பற்றியுள்ளது.

இங்கு முற்றிலும் ஏற்க முடியாத இன்னொரு விடயம் உண்டு. வடக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும், மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவளித்து வருகின்றன.

இதனால், தெற்கில் ஏற்படும் அரசியல் மாற்றங்களில் பக்கம் சாராத சரியான முடிவெடுக்க முடியாது ஆட்டம் போடும் நிலைமை கூட்டமைப்புக்கு உருவாகியுள்ளது.

அடுத்த வாரம் பிரதமர் ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வரப்போகிறது.

எவரது மனதையும் நோகடிக்காது முடிவெடுப்போம் என்கிறார் இரா.சம்பந்தன்.

அரசாங்கத்துக்கு நிபந்தனைகள் விதித்து முடிவெடுப்போம் என்கிறார் சுமந்திரன்.

வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்கும் கூட்டமைப்பு, தெற்குடன் முரண்படுமானால் வடக்கில் உருவாக்கப்பட்ட சபைகள் சரியும் நிலை காணும்.

தங்களுக்கு மூக்குப் போனாலும் எதிரியாகப் பார்க்கும் கஜேந்திரகுமார் அணிக்கு சகுனப் பிழையாக இருக்க வேண்டுமென்பதற்காக ஒட்டுக் குழுவெனக்கூறி காறியுமிழ்ந்தவரின் காலில் விழுந்துள்ள கூட்டமைப்பு, ஏகபோக தலைமைத்துவ திமிர் வெறியில் கூடாத கூட்டம்கூடி புதிய ஒட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இது நாட்கள் போகப்போக ஈ.பி.டி.பி.க்கே சாதகமாக அமையுமென்பதற்கு வேலணை பிரதேச சபையின் தலைமைப்பதவியை அது கைப்பற்றியுள்ள விதம் தெரிய வைக்கிறது.

இச்சபையில் கூட்டமைப்பிடம் எட்டு ஆசனங்கள் இருந்தும், ஆறு ஆசனங்களைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி. மகிந்தவின் பொதுஜன முன்னணி ஆதரவைப் பெற்று, கூட்டமைப்புடன் சரிசமனாகி திருவுளச் சீட்டின் மூலம் தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

இதன் துணைத்தலைவர் பதவி இரண்டு மேலதிக வாக்குகளால் மகிந்தவின் அணிக்குக் கிடைத்துள்ளது.

இதுதான் இன்றைய யதார்த்தம்.

ஓரிரு சபைகளைக் கைப்பற்றுவதற்காக சோரம் போயுள்ள கூட்டமைப்பு பல சபைகளை ஈ.பி.டி.பி.இடம் இழக்கப்போகிறது. இதற்கு தென்னிலங்கைக் கட்சிகள் கைகொடு;க்கவுள்ளன.

தனைமறந்து தன்நாமம் கெட்டு நிற்கும் கூட்டமைப்பு, வடக்கில் புதிய ஒட்டுக் கூட்டமைப்பை உருவாக்கி புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கு வித்திட்டுள்ளது.

இதன் அறுவடையை அவர்களே இவ்வருடம் தாயகத்தில் நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களில் அனுபவிக்கப் போகிறார்கள்.

No comments