ரணிலைக் காப்பாற்றுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்! - என்கிறார் டிலான்


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தால், அது தமிழ் மக்களையும், புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் காட்டிக் கொடுப்பதாக அமையும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். '' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் உறவுகளைக் கொண்டுள்ளது. இணக்கப்பாட்டு அரசாங்கம் கலைந்து விடக்கூடாது என்ற அக்கறை இருந்தால் கூட்டமைப்பு பிரதமருக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இதனை விடுத்து, பிரதமரைப் பாதுகாக்க முடிவெடுக்குமாயின் அது தமிழ் மக்களையும், புலம்பெயர் தமிழர்களையும் காட்டிக்கொடுப்பதாக அமைந்துவிடும். வாக்கெடுப்பு தினத்தன்று பெரும்பான்மையானவர்களின் வாக்கு இருந்தால் போதுமானது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் முக்கியமானவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்ற நிலையில் கூட்டமைப்பு ஒட்டுமொத்த நிலைப்பாட்டில் இல்லையென்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் காணக்கூடியதாகவிருந்தது. பிரதமருக்கு ஆதரவாக இருந்து நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிக்கப் போவதாக சுமந்திரன் ஆங்கில ஊடகமொன்றுக்குக் கூறியிருந்தார். நேற்றையதினம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதாக அவரே மீண்டும் கூறியுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கப் போவதாக ஐ.தே.க - சுமந்திரன் கூறுகின்றார். அதேநேரம் 02 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என ரி.என்.ஏ - சுமந்திரன் கூறுகிறார். நான் கூறுவதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இவர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார்" என்றார்.

No comments