ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.
இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.
சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.
சீலன் பற்றி தலைவர் காணொளில்http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-1260-27_11_07_pirapaharan_03.jpg
1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.
1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.

1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.
1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.
திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.
லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டுச் செல்கின்றது.

இவ்விரு வேங்கைகளின் நினைவின் இன்றைய தினத்திலே லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் இருவருக்கும் எமது அகவணக்கத்தை செலுத்தி
அவர்கள் விட்டுச் சென்ற வழியிலே ஒன்றிணைந்த தமிழினத்தின் பலமாக எமது விடியலின் கதவினைத் திறக்க அயராது பாடுபடுவோம்..
விடுதலையடைவோம்!!

சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.
சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.
https://eelamheros.files.wordpress.com/2011/07/nagulan.jpg
தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி ‘நாராயணசாமியும்’ எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.
பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர்.
(வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.
இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான்.
அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது.
சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)
புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி.
அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)
அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘அதோ அந்தப்பறவை போல…’. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார்.
அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.
புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் ‘இதயச்சந்திரன்’. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.
புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.

1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர்.
தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது.
கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர்.
புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர்.
1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.
“தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்’ என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.
இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது.
“தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை’ என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.
அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
“பயங்கரவாதத்தை ஒழிப்போம்’ என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.
ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.

No comments