நடிகர் எஸ்.பி.சேகர் வீடு முற்றுகை! வீடு மீது கல்வீச்சு!

பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்ட போது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பெண் செய்தியாளர்கள் பற்றி அவதூறான வகையில் மிகவும் கீழ்த்தரமான கருத்து பதிவிடப்பட்டிருந்ததால் எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.

சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராடிய போது இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியே வந்து எந்த விளக்கமும் தரவில்லை. இந்நிலையில் சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எஸ்.வி. சேகர் வெளியே வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு அதற்கு மன்னிப்பு என்று ஒரு அறிக்கை விடுவது பிரச்னைக்கான தீர்வு அல்ல. எஸ்.வி. சேகர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்ற எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. எஞ்சிய பத்திரிக்கையாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் முன்னரே இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

No comments