கூட்டமைப்பில் தனிநபர் மோதல் வேண்டாம்: சித்தார்த்தன்!


கூட்டமைப்பினுள் தனிப்பட்டவர்கள் எடுக்கும் சில முடிவுகளாலும் தனிப்பட்டவர்களுடைய கோபதாபங்களாலும் தென்னிலங்கை கட்சிகளினுடைய ஆதரவுடன் தப்பிபிழைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தலைவரான சித்தார்த்தனின் கருத்து சுமந்திரன் மற்றும் சம்பந்தனை இலக்கு வைத்து சொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மிகவும் பலம் பொருந்திய ஒரு இயக்கமாக இருந்து வந்தது. ஆனால் இன்று அந்தப்பலம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு பலமிழந்து நிற்பது தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும். நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களில் சக்தி மிக்க இயக்கமாக இருந்தது.
ஆனால் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அந்த நிலையை தலைகீழாக மாறியிருக்கிறது. தனிநபர்களுடைய தனிப்பட்ட விரோதங்கள், மனக்கசப்புகள் கூட்டமைப்பை அதால பாதாளத்துக்குள் கொண்டு சென்று விட்டிருப்பதுடன் நம்பி வாக்களித்த தமிழ் மக்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தி வருகிறது.
கூட்டமைப்புக்குள் இடம்பெறுகின்ற தனிநபர்களுடைய பிரச்சினைகளின் எதிரொலி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெட்ட தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ் மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பல மாற்றாங்கள் நிகழ்ந்துள்ளன. இது தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் பேரம் பேசும் சக்தியாகவும் பலிமிக்க சக்தியாகவும் விளங்கிய கூட்டமைப்பு இன்று உள்ளுராட்சி மன்றங்கள் விடயத்தில் பல இடங்களில் தென்னிலங்கை கட்சிகளினுடையதும் ஏனைய சில கட்சிகளினுடையதும் ஆதரவைப் பெற்று தப்பிப்பிழைக்கின்ற சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.
இது கூட்டமைப்புக்கு நல்லதல்ல தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல.
தனிப்பட்டவர்களுக்கிடையில் நடைபெறும் பனிப்போர் பலம் பொருந்திய இயக்கமாக இருந்து வந்த கூட்டமைப்பை ஒரு கேள்விக்குறியான இயக்கமாக உருவாக்கிவிட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் "இனியும் தொடருமாகவிருந்தால் இந்த கூட்டு இல்லாமல் போகும் சூழலும் ஏற்படும்". எனவே தனிப்பட்ட கோப தாபங்களை அரசியல் மேடையில் பேசுவதை நிறுத்தி மீண்டும் கூட்டமைப்பை பலம் பொருந்திய அமைப்பாக உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களது கட்சியின் நிலைப்பாடு.

ஒற்றுமையாக பலமாக இருந்து கொண்டு போராடினால்தான் நாங்கள் எதையாவது பெறமுடியும். அந்த அடிப்படையில் ஏனைய கட்சிகளையும் உள்வாங்கி கூட்டமைப்பை பலப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்புகள் நிதானத்துடன் விடயங்களை கையாள வேண்டும் என்பதுவே இன்றைய தேவையாகுமெனவும் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

No comments