நானாட்டான் பிரதேசசபை:அதிஸ்டத்தில் தமிழரசு!



நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று நானாட்டான் பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது.
அதில் தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டன.
நானாட்டான் பிரதேச சபைக்கான 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பிற்கு ஆதரவளித்தமையினால் இரகசிய வாக்களிப்பு இடம் பெற்றது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையைப் பெற்றனர்.
இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுலச் சீட்டின் மூலம் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி திருவுலச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. -இதன் போது உப தவிசாளர் தெரிவிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டன.
இதன் போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில் உப தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் இடம் பெற்றது.
குறித்த வாக்களிப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.
இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுலச்சீட்டின் மூலம் உப தலைவர் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்
போ.லூர்து நாயகம் பிள்ளை   தெரிவு செய்யப்பட்டார்.

No comments