ஏழைகளுக்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சியே அவசியம்: போப் லியோ XIV


அர்ஜென்டினா | ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுடன், பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று போப் லியோ XIV வலியுறுத்தியுள்ளார்.

அர்ஜென்டினாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர், அந்நாட்டு அதிபர் ஜாவியர் மிலே மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியபோது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

அப்போது, பொருளாதாரம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர, மக்கள் பொருளாதாரத்திற்குச் சேவை செய்யும் நிலை உருவாகக் கூடாது என்று குறிப்பிட்டார். கடுமையாக உழைத்தாலும் தமது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் மக்களின் துயரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜனநாயகம் என்பது அர்ஜென்டினாவின் வரலாற்று மரபில் முக்கியமானதொரு பகுதியாகும் என்றும், அதனைப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

அதிபர் ஜாவியர் மிலே முன்னெடுத்துவரும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், அரச செலவினக் குறைப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி வெட்டுக்கள் தொடர்பாக அர்ஜென்டினாவில் விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ள நிலையில், போப்பின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான உதவித்திட்டங்கள், பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய சமூக சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டமை கத்தோலிக்கத் திருச்சபையின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் செலவினங்களைக் குறைப்பது அவசியம் என மிலே அரசாங்கம் வாதிடுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டு பணவீக்கம் 200 சதவீதத்திற்கும் அதிகமான நிலையிலிருந்து சுமார் 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி, பொதுத்துறை வேலைவாய்ப்புக் குறைப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மூடல் ஆகியவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும், பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்றும் போப் வலியுறுத்தினார். அதிகாரத்தில் இருப்பவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் வரம்புகளை உணர்ந்து, ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மைக்காக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, மிலே கத்தோலிக்கத் திருச்சபையின் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கை விமர்சனங்களை கடுமையாக எதிர்த்திருந்தார். மறைந்த போப் பிரான்சிஸையும் அவர் விமர்சித்திருந்தார். எனினும், ஞாயிற்றுக்கிழமை அவர் தனது அணுகுமுறையில் மாற்றத்தைக் காட்டி, போப் பிரான்சிஸை மிகச் சிறந்த ஆளுமையாகவும், வரலாற்றில் முக்கியமான அர்ஜென்டினியராகவும் புகழ்ந்தார்.

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக மிலே அறிவித்துள்ள நிலையில், போப் லியோவின் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான வலியுறுத்தல்கள் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

1987ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் அர்ஜென்டினாவுக்குப் பயணம் செய்த பின்னர், சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு போப் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். தென் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக அர்ஜென்டினாவைச் சென்றடைந்துள்ள போப் லியோ, இதற்கு முன்னர் உருகுவேக்குச் சென்றிருந்ததுடன், அடுத்ததாகப் பெருவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

No comments