தெலங்கானா ஏரியில் கவிழ்ந்த மீட்புப் படகுகள்: காணாமல் போன 11 பேரும் பத்திரமாக மீட்பு!


தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ஏரியில் இரண்டு மீட்புப் படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சத்துப்பள்ளி அருகே உள்ள பெத்துப்பள்ளி ஏரியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனமழையால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கச் சென்ற மாநில பேரிடர் மீட்புப் படையினரின் இரண்டு படகுகளும் பலத்த நீரோட்டத்தில் கவிழ்ந்தன.

இதையடுத்து, மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர்வாசி என மொத்தம் 11 பேர் காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் அதிகாலை முதல் அடுத்தடுத்த கட்டங்களாக அனைவரும் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்துப் பேசிய கம்மம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அஜய் குமார், அதிகாலை 2.15 மணிக்கு முதல் நபரும், தொடர்ந்து மற்றவர்களும் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதிகாலை 5 மணிக்குப் பிறகு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்ட மீட்புப் பணியில் எஞ்சியிருந்தவர்களும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

மீட்புக் குழுவினரைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த விபத்தில் காணாமல் போன அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments