இனவெறிக் கொலையைத் தொடர்ந்து பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலைத் தடை செய்யக் கோரிக்கைகள் வலுக்கின்றன!
இனவாதத்தையும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தையும் ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டு – ஒளிபரப்பு உரிமத்தை ரத்துச் செய்யக் கோரிக்கை
பாரிஸ்: பிரான்ஸின் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான CNews மீது எழுந்துள்ள எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் Fox News தொலைக்காட்சியுடன் ஒப்பிடப்படும் இச்சேனல், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துகளையும் தீவிர வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகளையும் ஊக்குவிப்பதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பிரான்ஸின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்குப் பதிலாகப் பதவியேற்பதற்கான கருத்துக் கணிப்புகளில் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லெ பென் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படும் அரசியல் சூழலில், CNews தொலைக்காட்சி மீதான விமர்சனங்களும் தீவிரமடைந்துள்ளன.
இத்தொலைக்காட்சியை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இணையவழி மனுவில், திங்கட்கிழமை நிலவரப்படி ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பிரான்ஸ் தேசிய சட்டமன்றத்தின் இணையதளத்தில் பதிவாகியுள்ளதால், இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் கீழவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பாரிஸ் புறநகர்ப் பகுதியான டிராப்ஸ் மற்றும் லா வெரியர் நகரங்களில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதலும் இந்த எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. காங்கோ வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சுப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய 39 வயதுடைய சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்கள், ஆப்பிரிக்கர்கள் அல்லது வட ஆப்பிரிக்கர்களைப் போன்று தோற்றமளித்தவர்களைக் குறிவைத்ததாக அவர் தெரிவித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
குறித்த நபர் CNews தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்வையிட்டு வந்தவர் என அவரது தொடர்பாளர்கள் பிரெஞ்சு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குடியேற்றவாசிகளுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளுக்கு இத்தொலைக்காட்சி அதிக முக்கியத்துவம் வழங்குவதாக இடதுசாரி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
CNews ஒரு பிரச்சார இயந்திரமாகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டும் மனுவில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், இனவெறி வெறுப்பிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் CNews தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுமாறு பசுமைக் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், பிரான்ஸின் தீவிர பழமைவாத கோடீஸ்வரரான வின்சென்ட் பொல்லோரேவுக்குச் சொந்தமான ஊடகக் குழுமத்தின் ஓர் அங்கமான CNews, இது தொடர்பான கருத்துகளைக் கோரிய AFP செய்தி நிறுவனத்திடம், அரசியல் நோக்கமுடைய மனு குறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே தனது நோக்கம் எனத் தெரிவிக்கும் CNews, தீவிர வலதுசாரிக் கருத்துகளையும் இனவாதக் கோட்பாடுகளையும் ஊக்குவிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே மறுத்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய அரசியல் விமர்சகர் செனியா ஃபெடோரோவா CNews தொலைக்காட்சியில் கிரெம்ளின் ஆதரவு பிரசாரங்களைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும், பாரிஸின் மிகப்பெரிய புறநகர்ப் பகுதியான செயிண்ட்-டெனிஸின் மேயரும் மாலி வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சுப் பிரஜையுமான பாலி பகாயோகோ குறித்து இனவாதக் கருத்துகளை ஒளிபரப்பியதாகவும் இத்தொலைக்காட்சி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்களின்போது, ஒக்டோபர் 17ஆம் திகதி CNews தொலைக்காட்சியின் பாரிஸ் தலைமையகத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் கட்டடத்தின் ஜன்னல்கள் சேதமடைந்தன.
ஊடகச் சுதந்திரம், இனவாத எதிர்ப்பு, அரசியல் பிரசாரம் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் ஆகியவை தொடர்பான விவாதங்களை CNews விவகாரம் பிரான்ஸில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Post a Comment